பக்கம்:கழுமலப்போர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அவற்றின் உடல்களிலிருந்து விழுகி ஒன்று கலந்து தேங்கிப் பாயும் குருதி வெள்ளம், பொய்கையிலிருந்து புறப்பட்டுப் பாயும் புதுப் புனலாக, போரில் முறிந்து வீழ்ந்த வேல் முனைகளும் வாள் முனைகளும், நெய்தல்மலரும் வாளைமீனுமாக, களம் அவர்கள் காண விரும்பிய காட்சியைக் காட்டி விட்டது.

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாயெல்லாம்
நெய்தல் இடைஇடை வாளை பிறழ்வன் போல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளிவாள் தாயினலே
கொய்சுவல் மாவின், கொடித் திண்தேர்ச் செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.” —களவழி. 33

மலையில் பாய்ந்தேறும் புலி

யானைப் படையால் பெருமையுற்றது சேரர் படை. அப்படையைக் கொன்று களம் கொள்வது அவ்வளவு எளிதன்று. பகைவர் படை வீரர் எவ்வளவுதான் ஆரவாரம் செய்து கொண்டு வரினும் அது கண்டு அஞ்சாது அவ்வேழப் படை. பகைவர்களின் போர் முரசு எவ்வளவுதான் முழங்கினும் அது கேட்டு நடுங்காது அது. காற்றாலோ, மழையாலோ, கடும் இடியாலோ சிறிதும் கலங்காது மலைபோல், நிலை கலங்காது நின்று போரிடும் பேராண்மை வாய்ந்தது அவ்வேழப் படை.

பகைவனின் இப்படைப் பலத்தை அறிந்திருந்தான் செங்கணான். அதனுல், அவ்வேழப் படையின் வலி கெடுக்கும் ஏற்பாடுகளோடு வந்திருந்தான். வேழப் படையை வென்று அழிக்கக் கூடியது, அது எதிர் பார்க்காத நிலையில், கண்மூடிக் கண் திறப்பதற்குள், விரைந்து பாயவல்ல குதிரைப் படைகளே என்பதை அறிந்திருந்தான் அவன். அதனால் குதிரைகளைப் பெருவாரியாகக் கொண்டு வந்திருந்தான். அதிலும் உள்ளத்தில் ஊக்கமும், உடம்பில் உரமும் மிக்க குதிரைகளையே தேர்ந்துகொண்டு வந்திருந்தான். அம்மட்டோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/74&oldid=1360463" இலிருந்து மீள்விக்கப்பட்டது