பக்கம்:கழுமலப்போர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

யானை ஒன்றிற்கே இல்நிலை என்றால், அத்தகைய யானைகள் எண்ணிலாதன களம் புகுமாயின், பகைவர் படை எங்கே நிற்கவேண்டும் என்று அறிந்து கூறவே முடியாது. அவ்வளவு நெடுந்தொலைவில் அது நிற்பதே நலம் பயக்கும்.

சேரநாட்டுப் படையில் யானைகளே அதிகம். படை வரிசையின் முன்னிலையில் அவைகளே அணிவகுத்து நிற்கும். இதை அறிந்தும் சோழர் படைக் களம் புகுந்துளது. களம் புகுந்த படை நெடுந்தொலைவில் நின்று தம்மைக் காத்துக் கொள்ளவேண்டும்; சேரரின் யானைப் படை நிற்கும் அணியை அணுகாமல், பிற படை நிற்கும் இடம் சென்று போரிட வேண்டும். என்று கருதிற்றோ என்றால் அதுவும் இல்லை.

சேரனைச் சிறைபிடிக்க வேண்டுமாயின், அவன் வேழப் படையையே முதலில் வெற்றிகொள்ளுதல் வேண்டும். அதனால் சோணாட்டுப் படை, அவ்வேழப் படை வரிசையினையே வளைத்துக்கொண்டது. சோழர் படையாளர்க்கு அவ்வளவு நெஞ்சத்துணிவு உண்டானதற்குக் காரணம், அப் படை தன் அங்கமாக, விற்படை அணி ஒன்றைப் பெற்றிருந்ததேயாகும். வேழங்களை அணுக வேண்டியது இல்லாமலே, அவை நிற்கும் இடத்திற்கு நெடுந்தொலைவில், அவற்றில் கேடு விளைவிக்கக்கூடிய எல்லைக்கு அப்பால் இருந்தவாறே, தம் வில்லாற்றலால், அவ்வேழப் படையைக் கொன்றழிக்கவல்ல வில்லாளர் பலர். அப்படையில் இடம் பெற்றிருந்தனர் அதனால் சோழர் படை, சேரர் வேழப் படை கண்டு அஞ்சாமல் களம் புகுந்தது.

களம் புகுந்த வில் வீரர், விற்களை வளைத்து, அம்புகளை மழைத்தாரைகளென மளமளவென ஏவினர். விற்களிலிருந்து வெளிப்பட்ட அம்புகள் விரைந்து சென்று, வேழங்களின் உடலில் குறி தவறாமல் ஆழப் புதைந்தன, ஓர் அம்பாலோ; ஈர் அம்பாலோ வேழங்களின் உரம் அழிந்துவிடாது என்பதை வில்வீரர் அறிந்திருந்தமையால், எண்ணிலா அம்புகளை எடுத்தெடுத்து ஏவிக்கொண்டே இருந்தனர். யானைகளின் உடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/78&oldid=1360480" இலிருந்து மீள்விக்கப்பட்டது