பக்கம்:கழுமலப்போர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தோப்பைக் கடந்து செல்ல வேண்டி வந்தால், படைக்குத் தலைமை தாங்கிச் செல்வோர், அப்பனந் தோப்புள் நுழையும் காலத்தில், நுங்குக் காலமாய் இருந்து, அவர்கள் நுங்குத் தின்று சென்றால், படையின் இடை நிலையில் உள்ளார் அத்தோப்பைக் கடக்கும் காலம் பழக் காலமாய் மாறிவிடும் ஆதலின், அவர்களுக்கு நுங்குக் கிடைக்காது; பழமே கிடைக்கும்; படையின் கோடியில் வருவார் ஆங்கு வரும் காலத்தில், பழமும் அற்றுப்போய்க் கிழங்குக் காலமே வந்துவிடும் ஆதலின், அவர்கள் கிழங்கே தின்பர்” என்று கூறியுள்ளார். அவர் கூறியதை வைத்து நோக்கினால், படையின் முன் வரிசையில் செல்வார் கடந்து சென்ற ஓர் இடத்திற்குப் படையின் இறுதியில் இருப்பவர் வந்து சேரக் கிட்டதட்ட ஒன்பது திங்கள் ஆகும. அங்ஙனமாயின், சோழர்படை எவ்வளவு பெரிது என்பது புலனாம்.

அப்படை அளவால் மட்டும் பெரிதன்று. ஆற்றலாலும் பெரிது அப்படை. இயல்பாகவே மறவர் குடியில் பிறந்தவர்களையே கொண்டது அது. தேரில் அமர்ந்தும், யானையைச் செலுத்தியும், குதிரை ஊர்ந்தும் களம் கலங்க ஓடியும் போரிடும் அம்மறவர் அனைவரும் பெரிய பெரிய படைக் கலங்களைத் தளராது தாங்கிப் போரிட வல்ல திண்மை வாய்ந்த தோள் படைத்தவராவர். அத்தகையார்களைக் கொண்ட சோழர் பெரும் படையே கழுமலப் போரில் கலந்து கொண்டது.

சோழர் படை வீரர்க்கு ஓர் ஆசை. அவர்கள் கழுமல நகர் நோக்கி வருங்கால், இடை வழியில் நுழைத்து வந்த பனந்தோப்பில் புயல் காற்றுப் புகுந்து கடுமையாக வீச, அதன் கடுமைக்கு உள்ளாகிய பனை மரங்கள் பேயாட்டம் ஆடிக் காய்களைப் பறிகொடுக்க, உதிர்ந்த காய்கள் அத்தோப்பு நிறைய உருண்டு கிடந்த காட்சியைக் கண்டு வந்தார். போலும், அதனால் அது போலும் காட்சியைக் களத் திலும் காண வேண்டும் என்று எண்ணிவிட்டார்கள். அவ்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/80&oldid=1360486" இலிருந்து மீள்விக்கப்பட்டது