பக்கம்:கழுமலப்போர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

களைப் பிடுங்கித் தின்னலாம் எனக் காத்துக் கிடந்தது. அந் நிலையில் போரும் ஒருவாறு ஓய்ந்தது. சோணாட்டு வீரர்கள் வீசிய வேற்படைகள், சேரநாட்டு வீரர்களின் உடலில் பாய்ந்தன. அவர் குடர்களைச் சரித்துவிட்டு அங்கேயே அசைக்க முடியாதபடி ஆழமாகப் பதிந்துவிட்டன. அதற்கு மேலும் எதிர்த்து நிற்கமாட்டாத சேரர் படை புறமுதுகிட்டது.

உடனே களத்தில் புகுந்தன குள்ளநரிகள். அவற்றுள் சில, வேல் தைத்து வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் சரிந்த குடர்களைக் கவ்வி இழுத்தன. வீரர்களின் உடல் உரம் மிக்க உடலாதலின், அக்குடர்கள் எளிதில் அறுபடவில்லை. ஆயினும் அவற்றை விடாது பற்றி ஈர்த்துக்கொண்டே யிருந்தன குள்ள நரிகள்.

அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, சேரமான் கணைக்கால் இரும்பொறையின் கைகளில் விலங்கை மாட்டி, அச்சங்கிலியைத் தேர்க்கம்பத்தில்கட்டினார்கள் சில, வீரர்கள். அதைக் கண்ட சிலர்க்கு, அந்நினைப்பே அவர் நெஞ்சில் நிலை பெற்றுவிட்டமையால், வேற்படைகள், தம் காம்புகள் வெளியே தோன்றும்படி தைத்திருக்க, அவற்றால் சரிந்த குடர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் குள்ள நரிகள், வேட்டை விரும்பும் வீரர் மனைக்கம்பங்களில், கழுத்தில் சங்கிலி மாட்டி வரிசை வரிசையாகக் கட்டி வைத்திருக்கும் வேட்டை நாய்கள் போல் காட்சி அளித்தன. என்னே களக் கொடுமை!

“இணரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர்இலங்கு எஃகம் எறியச்; சோர்ந்து உக்க
குடர்கொண்டு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோணாய் புரையும், அடர்பைம்பூண்
சேய் பொறாது அட்டகளத்து” —களவழி : 34

மருண்டோடும் மயில் கூட்டம் :

சோணாட்டுத் தலைநகரை அடுத்த ஒரு மலர்ச் சோலையில், ஒரு நாள் மாலை, சோழன் செங்கணான் உலவிக் கொண்டிருந்தான். அம்மலர் வனத்தின் வனப்புக்களைக் கண்டு மகிழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/82&oldid=1360512" இலிருந்து மீள்விக்கப்பட்டது