பக்கம்:கழுமலப்போர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

வந்தவன் ஓரிடத்தில் மயிற்கூட்டங்கள், தம் தோகைகளை விரித்து ஆடிக்கொண்டிருப்பதைக் கண்ணுற்றான். கார் மேகத்தின் வரவு கண்டு பெற்ற களிப்பால் அம்மயில்கள் ஆடும் நடனத்தில் தன் நெஞ்சைப் பறிகொடுத்து விட்டான். அது சிறிது நேரமே. சிறிது நாழிகைக்கெல்லாம் ஒரு பெரும் புயற்காற்று எழுந்தது. மரக்கிளைகள் மளமளவென ஒடிந்து வீழ்ந்தன. ‘ஓ’ என்ற பேரிரைச்சல் எழுந்தது. அவ்வளவே, மயில்களின் மகிழ்ச்சி எங்கோ மறைந்து விட்டது; அவற்றின் உள்ளத்தில் அச்சம் குடிபுகுந்து கொண்டது; உடனே மூலைக்கு ஒன்றாக ஓடத் தொடங்கி விட்டன.

மயிலின் ஆட்டம் கண்டு மகிழ்ந்த மன்னவன், அவற்றின் ஓட்டம் கண்டு உள்ளம் துடித்தான். அந்நிலையில் ஓடோடி வந்தான் ஓர் ஒற்றன், கழுமலக் கோட்டையில் சேரர் படை திரட்டுவதைத் தெரிவித்தான். சோழன் சினம் கொண்டான்; அவன் கண்கள் சினத்தால் சிவந்தன; அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது ஒரு வஞ்சினம். “என் மீது படை கொண்டு எழுந்த மலை நாட்டு மாவீரரின் மனைவியர், புயல் கண்டு அஞ்சி ஓடும் இம்மயிற்கூட்டம்போல், தம் கணவரை இழந்த கொடுமை கண்டு அலறித் துடித்து அழும்படி செய்யேனாயின், என் அரசு அழிக” என அறிவித்து விட்டு, அன்றே சேரநாடு நோக்கிப் படையைச் செல்ல விட்டான்.

கழுமலக் கோட்டையை வளைத்துப் போரிட்டான். கணக்கற்ற வீரரை வீழ்த்தினான். வெற்றி கண்டான். எடுத்த சூளையும் முடித்தான். கணவரை இழந்த சேர நாட்டுச் செல்வியர் சிந்தை நொந்து, செய்வதறியாது, அலறிப் புடைத்துக்கொண்டு ஓடோடி வந்து, களம் புகுந்து ஓலம் இட்டனர். அக்காட்சி கண்டு களித்தது செங்கணான் உள்ளம். என்னே அப்போர் வெறி!

“கடிகாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு
வீற்று வீற்று ஓடும் மயில் இனம்போல்—நாற்றிசையும்
கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
சினமால் பொருத களத்து” —களவழி: 29


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/83&oldid=1377024" இலிருந்து மீள்விக்கப்பட்டது