பக்கம்:கழுமலப்போர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. போரின் பின் விளைவு

கைப்பற்றிய கணைக்கால் இரும்பொறையோடு உறையூர் வந்து சேர்ந்தான் செங்கணான், போரில் தோற்ற பகையரசர்களைக் கைப்பற்றிச் சிறை வைக்கும் போதும், அவர் அரசர் என்பதை மறவாது, மதிப்போடே நடத்துதல் வேண்டும் என்ற தமிழரசர்களின் போர் அறப் பண்பினை அறியாதவனல்லன் செங்கணான். ஆயினும், படைத் தலைவன் பழையனை இழந்த துன்பம் அவன் உள்ளத்தில் பசுமையோடிருந்தது. வென்று துரத்த முடியாத கொங்கரை வென்று துரத்திய வேற்படை மிக்க அவ்வீரனை, ஆறு படைத் தலைவர்களை, ஒரே களத்தில் அழித்துக் கொன்ற ஆற்றல் உடைய அவ்வீரனைக் கொன்றவன் கணைக்கால் இரும்பொறை என்பதால், செங்கணானுக்கு அவன்பால் கொண்ட சினம், அவன் சிறையுற்ற பின்னரும் தணிந்திவது. அவனை அவன் வாழ் நாள் முழுதும் சிறையில் வைத்துச் சிறுமை செய்யவேண்டும்; பழையனைக் கொன்றமைக்குப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே செங்கணான் உள்ளத்தில் தலை தூக்கி நின்றது. அதனால், அவனைக் குடவாயில் என அழைக்கப்பெறும் கும்பகோணத்திற்குக் கொண்டு போகும்படி ஆணையிட்டான். சோணாட்டுப் பெரிய சிறை அங்கு இருந்தது. அரிய காவல் உடையது. அழிக்க முடியாத அரண் பெற்றது. அதனுள் அடைக்கப்பெற்றவர் எவ்வளவு முயன்றாலும், வெளியேறிப் பிழைத்துப் போவதோ, வெளியார் எவ்வளவு பெரும்படை கொண்டு வளைத்துக்கொண்டாலும், அகத்தில் அடையுண்டு கிடப்பாரை விடுதலை செய்துகொண்டு போவதோ இயலாது. அஃது அவ்வளவு அரிய காப்புடைமையால், சோழர்கள், தம் அரச செல்வங்களை அக்கோட்டைச் சிறைக்குள்ளேயே வைத்திருந்தனர். மகள் உள்ளத்தில் காதல் அரும்பு மலரத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த ஒரு தாய், அம்மகள், அதனால் கெட்டழிந்துவிடக் கூடாது எனும் கருத்துடையளாகி, அவள் வீட்டைவிட்டு வெளிச் செல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/84&oldid=1360523" இலிருந்து மீள்விக்கப்பட்டது