பக்கம்:கழுமலப்போர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தம்மைப் புரந்த அக்காவலனுக்குச் சோழன் அமைத்திருக்கும் காவலை அகற்றி, அவனை மீண்டும் அரியணையில் அமர்த்தி மகிழவேண்டும் என்று விரும்பினார் புலவர்.

செங்கணானை அவர் அதற்குமுன் அறியார் ஆயினும், அவன் இயல்பு யாது என்பதை அவர் கேட்டிருந்தார். “புலவர்கள்பால் பெருமதிப்பு உடையவன்; அவர் கூறும் அறவுரைகளைப் பொன்னேபோல் ஏற்றுப் போற்றும் பேருள்ளம் உடையான். அவனுக்குக் கணையன் பால் வந்த சினமெல்லாம், கணையன் அவன் பகைவராகிய கொங்கரைத் தன் படைத் துணைவராகக் கொண்டான் என்ற அவ்வொரு நிகழ்ச்சிக்கே; கணையன் மீது அவனுக்கு நேரான பகை கிடையாது; ஆகவே, அக்கொங்கர் அறவே அழிவுற்றுப் போன இந்நிலையில் அவன் சினமும் சிறிது ஆறியிருக்கும். இந்நிலையில் அவன்பால் என்போலும் புலவர்கள் சென்று வேண்டினால், அவன் கணையனைச் சிறைவீடு செய்ய மறுக்கான்” என்று நம்பினார். நம்பியவாறே, செங்கணானைச் சென்று காண அப்போதே புறப்பட்டார்.

அந்நிலையில், புலவர் உள்ளத்தில், மற்றும் ஒரு புதிய உணர்வு உருப்பெற்றது. செங்கணான், தம் வேண்டுகோளைச் செவிமடுக்க வேண்டுமாயின், அவனுக்குத் தம்பால் ஒரு பற்று உண்டாதல் வேண்டும். அது உண்டாக வேண்டுமாயின், அவன் உள்ளம் உவக்கும் ஒன்றைத் தாம் செய்தல் வேண்டும். அரசர்கள் புகழ் விரும்புபவர்கள். பிற புகழினும், வெற்றிப் புகழையே பெரிதும் விரும்புவார்கள். ஆகவே எந்த நிகழ்ச்சியால் பெற்ற மகிழ்ச்சி, அவன் மனத்தில் மண்டிக் கிடக்கிறதோ, அம்மகிழ்ச்சி மேலும் மிகும்படி செய்தல் வேண்டும். அவன் கழுமலப் போரில் பெற்ற வெற்றியைப் பொருளாகக் கொண்டு, பாக்கள் பல பாடி அவனைப் பாராட்ட வேண்டும் அவை கேட்டு, அவன் தம்பால் பற்றுக்கொள்ளும் அந்நிலை நோக்கி, நண்பன் விடுதலைக்கு வழி காணுதல் வேண்டும் என்று கருதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/86&oldid=1360645" இலிருந்து மீள்விக்கப்பட்டது