பக்கம்:கழுமலப்போர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

குறுங் கலந்து தோன்றும் பகுதி பாலை. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம். கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல். நிலப் பகுதி, இவ்வாறு ஐவ்வகையாகப் பகுக்கப் பெறும் எனினும், அவற்றுள் குறிஞ்சி நிலமே முதற்கண் தோன்றிய நிலமாம். “கல் தோன்றி மண் தோன்றாக் காலம்” எனப் பழந் தமிழ் நூல் ஒன்று பகர்வதும் காண்க.

நிலங்களுள், குறிஞ்சி நிலமே முதற்கண் தோன்றிய நிலமாதலைப் போன்றே, மக்கள் முதன் முதலில், தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய இடமும் அம்மலைநாடே ஆம். மக்கள், தங்கள் வாழ்க்கையினை ஆண்டே தொடங்கியதற்கு, அது முதற்கண் தோன்றியது என்பதினும், அம்மக்களுக்குத் தேவையாம் உணவுப் பொருள்கள் அனைத்தையும், அவர் உழைப்பை எதிர் நோக்காமலே அளித்தது அந்திலம் என்பதே பொருந்தும் காரணமாம். முயற்சியின்றியே பெறலாகும் காயும், கனியும், கிழங்கும் அந்நிலத்தில் நிறையக்கிடைத்தன. உண்ணு நீர்ச்சுனைகளும் ஆங்கேயிருந்தன. காயும், கனியும், கிழங்கும் அருகிய காலத்தில், ஆண்டுவாழ் மக்களுக்கு உணவாகிப் பயனளிக்கும் உயிரினங்களும் ஆங்கே வாழ்ந்திருந்தன.

தமக்கு வேண்டும் உணவுப் பொருள்கள், இவ்வாறு தம் முயற்சி ஒரு சிறிதும் தேவைப்படாமலே, எங்கும், எப்பொழுதும், கிடைத்தமையால், நாளைக்கு வேண்டும் என ஈட்டி வைக்க வேண்டிய இன்றியமையாமை, அக்குறிஞ்சி நில மக்களுக்கு உண்டாகவில்லை. ஆனால், அந்நிலை நெடிது நாள் நிற்கவில்லை, நாள் ஆக ஆக, மக்கள்தொகை பெருகிக்கொண்டே வந்தது. ஆனால், அம்மக்கள் வளர்ச்சிக்கேற்ப, உணவுப் பொருள்கள் பெருகவில்லை. மக்கள் தொகை நாள்தோறும் பெருகிக் கொண்டேயிருந்தமையாலும், மக்கட் பெருக்கத்திற்கேற்ப, உணவுப் பொருள்கள் பெருகாமையோடு, மக்கள் அவற்றைத் தொடர்ந்து தின்றுகொண்டே வந்தமையால், அவை சிறுகச் சிறுக அற்றுக்கொண்டே வந்தமையாலும் மக்களுக்கு உணவுக் குறைபாடு உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/9&oldid=1357087" இலிருந்து மீள்விக்கப்பட்டது