பக்கம்:கழுமலப்போர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

முடியாதது நிகழ்ந்துவிட்டது. அவர் எண்ணத்திற்கு எதிர்மாறானது நடந்துவிட்டது.

குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்தான் சேரமான். அவன் அந்நிலையை எதிர்பார்த்தவன் அல்லன். அந்நிலையை, அவன் உள்ளமும் தாங்கிக் கொள்ளாது. வெற்றிப் புகழ் பெற விரும்பி களம் புகுந்த அவன், தோற்றுச் சிறைப்பட்டமைக்குப் பெரிதும் நாணினான். வெற்றி வாய்க் காது போயினும், வீரப் புண் பெற்று விண்ணுலகடையும் வாய்ப்பும் கிடைத்திலதே என்று எண்ணி எண்ணி வருந்தினான். அவ்வுள்ளத் துயர் ஒன்றினாலேயே உயிர்போகும் நிலை பெற்றுவிட்ட அவனுக்கு, அத்துயரை மேலும் மிகுவிக்கும் ஒன்று நடைபெற்றுவிட்டது.

ஒரு நாள் நீர் வேட்கை மிகவே, சிறைக் காவலரை விளித்து உண்ணு நீர் தருமாறு வேண்டினான். சேரமான் சிறந்த பேரரசனே எனினும், அவர் கண்களுக்கு அவனும் ஓர் சிறைக் கைதியாகவே புலப்பட்டான். மேலும் தங்கள் பெரும் படைத்தலைவன் பழையனைக் கொன்றமைக்குப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற காழ்ப்பு உள்ளமும் அவர்களுக்கு இருந்தது. அதனால், அவன் வேண்டியதைக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அவ்வாறு தாராது போவது தம் கடமையில் தவறியது ஆகுமே என்பதை உணர்ந்தனர். அதனால், அவன் கேட்டபோதே தாராது, காலம் தாழ்த்தித் தந்தனர்; தரும்போதும் அரசன் என்ற மதிப்பு இன்றித் தந்து இழிவுபடுத்தினர்.

காவலர் கொடுமையைக் கண்டான் கணையன். “நட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று” என நினைக்கும் நல்லுள்ளம் உடையான் அவன். அவ்வுள்ளுணர்வு உடையவனே உயர்ந்தோனாவன். தம் நிலையில் தாழும் காலம் வந்துற்ற போதும், தம் மானத்தை இழக்க நினையா மனம் உடையாரை, மானத்தை இழக்க வேண்டிய இன்றியமையாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/90&oldid=1360668" இலிருந்து மீள்விக்கப்பட்டது