பக்கம்:கழுமலப்போர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

வந்துறுமாயின் அந்நிலையில், தம் உயிரை இழந்து மானத்தைக் காக்கும் மாண்புடையாரை, இம்மண்திணி ஞாலத்து மக்கள் எல்லாம், அம்மண்ணுலகம் உள்ளளவும், மதித்து மனத்தகத்தே நிறுத்தி வழிபாடு செய்வர்” என்ற இம் மறங்கெடா மானத்தின் மாண்பினை உணர்ந்த மன்னன், கணைக்கால் இரும்பொறை. ஆதலின், சிறை காவலர் செயல் கண்டு அவன் சிந்தை நொந்தான். அவர் தந்த தண்ணீரை உண்ண மறுத்தது அவன் உள்ளம். அந்நீர் நஞ்சினும் கொடிதாகக் காட்சி அளித்தது அவன் கருத்துக்கு. அதனால், உண்ணு நீர்க்கலத்தை ஒருபால் ஒதுக்கி வைத்துவிட்டான். அவன் நீர் வேட்கை எங்கோ சென்று மறைந்துவிட்டது. அவன் நினைவு எதை எதையோ எண்ணத் தொடங்கிவிட்டது.

போர்க்களம் புகுந்து போரிட்டு, மார்பிலும், முகத்திலும் வீரப்புண் பெற்ற வெற்றி வீரர்க்கே, வானுலக வாழ்வில் இடம் உண்டு. ஆதலின் பிறந்த குழந்தை முதல் இறக்கும் கிழவர்வரை உள்ள எல்லோரும் வீரப் புண்பெற்று வீறுபெற வேண்டும் என்று விரும்பினார்கள், நாடாளும் நல்லவர். அவர்கள், இறந்து பிறந்த குழந்தைக்கும், உருவின்றிப் பிறந்த ஊன் தடிக்கும் வீரப்புண் பெறும் வாய்ப்பு இல்லாமையால், அலை வானுலக வாழ்வை இழந்து விடுதல் கூடாது என்ற உயர்ந்த உள்ளம் கொண்டு அவற்றை இடுகாட்டில் சென்று சுடுவதன்முன், தருப்பைப்புல் மீது கிடத்தி, வாளால் இருவேறு துண்டுகளாக வெட்டி, வாள்வடு உண்டாக்கி, “பிற வெற்றி வீரர்க்கு உண்டாகும் வாய்ப்பெல்லாம் இவற்றிற்கும் வாய்க்குமாக” என வாழ்த்திச் சுட்டனர். அத்தகைய பெருவேந்தர் வழியில் வந்த நான், போரில் வெற்றி பெறாது போயினும், வீரப் புண்ணாவது பெற்றேனா இல்லை. வீரப்புண் பெற்று விழுமிய நிலைபெறாது போயினும், உயிரிழந்து மானம் இழக்காத மன்னன் என்ற பெயரையாவது நிலை நாட்டினேனா இல்லை. சங்கிலியால் பிணிக்கப்பெற்று இழுத்துச் செல்லப்படும் நாய் போல், பகைவரால் கையில் விலங்கிடப்பெற்று, சங்குக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/91&oldid=1360672" இலிருந்து மீள்விக்கப்பட்டது