பக்கம்:கழுமலப்போர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

அம்மறைவு, மறையா மாண்புமிக்க இச்செய்யுள் பிறப்புதற்குக் காரணமாயினமை கண்டு களிப்புற்றார். அவன் மானம் இழக்கா மற மாண்பு கண்டு மன்னன் தலை வணங்கினான்.

மன்னன் மனம் மாறியது. போர் போர் என எப்போதும் போர் வெறிகொண்டு வாழ்ந்த செங்கணான் சிந்தை தெளிவடைந்தது. மானமிக்க மன்னன் மறைவிற்குக் காரணமாகிய தன் கொடுமைதீர, அந்நாள் முதல் நல்லற நெறியில் நிற்கத் துணிந்தான். இறைவன் திருக்கோயில் கொண்டிருக்கும் இடம்தோறும் கோயில் அமைக்கும் பணியினை அன்றே தொடங்கினான். இறப்பதற்குள் எழுபது பெருங்கோயில் களைக் கட்டி முடித்தான். அதன் பயனாக, “நல்லான் ஒருவனைக் கொன்ற நயமிலி” என்று நாட்டோரால் பழிக்கத்தக்க அவன், சைவ, வைணவப் பெரியார்களால், தம் அருட்பாடல்களில் வைத்துப் பாராட்டத்தக்க பெருநிலை பெற்றான். அவன் வரலாற்றினை விளங்கப் பாடிய பெரியார்களும், அவன் சிலந்தியாய்ச் சிவத்தொண்டு புரிந்ததும் செங்கணானாய்ச் சிவன் கோயில் கட்டியதும் ஆய, அவன் தொடக்க வரலாற்றினையும், முடிவு வரலாற்றினையும் மட்டும் கூறி, இழிவுடைய அவன் இடைநிலை வரலாற்றினை எடுத்தோதாது மறைந்து விட்டார்கள். இறவாப் பெருநிலை பெற்றுவிட்டான் அவனும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/93&oldid=1360679" இலிருந்து மீள்விக்கப்பட்டது