பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27

இன்ப நெறிகளுடன் வாழ்வாயாக! என்பார் கவியரசி சரோஜினி தேவி, தனது குழந்தைகளின் பெயர்களை இவ்வாறு கவிதைகளால் விளக்குகிறார்.

கவியரசி சரோஜினி தேவி, யாரை மனமார நேசித்தாரோ, அவரையே தனது வாழ்க்கைக்குத் துணைவராக ஏற்கும் பேறு பெற்று, “தற்காத்தி தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்” என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, அமைதியும் பிறர் போற்றும் இல்லற அழகுடன் குழந்தைகள் ஈன்று வாழ்க்கையை வளமாக நடத்தி வந்தார்.

தாய்மை பண்புக்குகந்தவாறு நான்குக் குழந்தைகளைப் பெற்றெடுத்து அக்குழந்தைகளைப் பேணி, பாதுகாத்து வளர்த்தார். அப்படி வாழ்ந்தும் கூட, அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு ஏக்கம், நெஞ்சிலே ஒரு நெருஞ்சி முள் தைத்தாற்போல உறுத்திக் கொண்டே இருந்தது.

கவிதையும், கற்பனையுமா வாழ்க்கை? மலர்கள் அழகும்-சோலைகளின் வனப்புகளும், வெண்ணிலாவும், தென்றலும், மேடைப் பேச்சுகளும் மேன்மையான புகழ் தரும் இலக்கிய ஆய்வுகளும் தானா வாழ்க்கை?

இல்லை; வேறு ஏதோ ஓர் ஏக்கம், பிரச்னைகள் அழுத்தம், ஆற்ற வேண்டிய மற்றும் ஒரு கடமையும் உள்ளதே- அதுதான் வாழ்க்கை என்று சரோஜினி தேவி நம்பினார். ஆனால், அந்தப் பிரச்னை என்ன என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார்.


6. “கெய்சர் ஹிந்த்” பதக்க வழங்கி பிரிட்டிஷ் பாராட்டு!

கவிக்குயில் சரோஜினி நெஞ்சிலே தைத்திட்ட அந்த நெருஞ்சி முள் நெருடல் எது?