பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கவிக்குயில் சரோஜினியின்

கள். அதனால், அவருக்குக் கவியரசி என்ற பட்டத்தையும் அவர்கள் வழங்கிப் போற்றினார்கள்.

கவிதைகள் படைப்பால் உலகத்தையே ஈர்க்கலாம், வெல்லலாம், இறைவனையுமே வசப்படுத்தலாம் என்ற அவரது எண்ணத்திற்கேற்ப, பிற நாட்டு மேதைகள் அவருக்குக் கவியரசி என்ற பட்டத்தைத் தந்ததோடு இல்லாமல், 'கவிக்குயில்' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டலானார்கள்.

பம்பாய் மாநகர் வந்ததற்குப் பிறகு, கவிக்குயில் சரோஜினி தேவிக்கு உலகளாவிய பாராட்டும், பட்டங்களும் தேடிவந்தன; ரசிகர் பெருமக்களும் கவிகுயிலை நேரில்கண்டு பாராட்டிட வந்தவண்ணம் இருந்தார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி கவிக்குயிலின் மக்கள் செல்வாக்கைக் கூர்ந்து கவனித்தது; தினந்தோறும் சரோஜினி பாடல்கள் ஏதாவது ஒரு நாட்டின், ஏதாவது ஒரு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருப்பதையும் நோக்கமிட்டார்கள். அதனால், பிரிட்டிஷ் அரசு சரோஜினி தேவியின் புகழ் குவியும் துவக்கக் காலத்திலேயே அவரது அறிவையும், புலமையையும் பாராட்டிட முன்வந்தது.

இந்தியாவின் மாபெரும் கவிஞராக அப்போது போற்றப்பட்டு கொண்டிருந்த கவிஞர் இரவீந்த்ரநாத் தாகூருக்கு "கெய்சரீ ஹிந்த்" என்ற பட்டத்தைக் கொடுத்துப் பிரிட்டிஷ் அரசு பாராட்டியதைப் போல, அதே பட்டத்தை கவிக்குயில் சரோஜினிதேவிக்கும் அரசு சார்பாக வழங்கப்பட்டது. சரோஜினி தேவியின் புகழ் வெளி நாடுகளில் மென்மேலும் வளர்ந்து, உயர்ந்தது.

கவிக்குயில் சரோஜினி தேவிக்கு அரசு சார்பாகக் கெளரவித்து பட்டம் வழங்கி, பிரிட்டிஷ் அரசும் பெருமை தேடிக்கொண்டது குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமாகும்.