பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

45

போர்க்களத்தில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய அரிய செயல்களையும், உயிர்த் தியாகங்களையும், பண உதவிகளையும் ஏற்று ஆங்கிலத் தளபதிகளும், அரசு அதிகாரிகளும் மனமாரப் பாராட்டினார்கள்.

போரில் இங்கிலாந்து பெற்றது வெற்றி. ஆனால், மறந்தது நன்றியை எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; ஆனால், செய்நன்றியைக் கொன்ற மாபாவிகளை மறக்குமா காலம்?

செய்நன்றி மட்டுமல்ல; காலத்தால் செய்த உதவியை கொன்றுவிட்ட பிரிட்டிஷ் பாம்பு நஞ்சு கக்க ஆரம்பித்தது எந்தவித விசாரணைகளும் இல்லாமல், விடுதலைப் போராட்டத்தலைவர்களைச் சிறையிலடைத்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே பொங்குமாங் கடலெனப் பொங்கி எழுந்தார்கள்.

பொதுமக்கள் எதிர்ப்புகளைக் கண்டு பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடத் தயாரானது; அந்த காட்டுமிராண்டிச் செயல்களில் ஒன்று தான் ஜாலியன் வாலாபாத் துப்பாக்கிப் படுகொலை.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஓர் ஊர் ஜாலியன் வாலா பாத். விடுதலைப் போராட்ட வீரர்களையும், தலைவர்களையும் பலாத்காரமாகச் சிறை பிடித்து அடைக்கப்பட்டதால், அவ்வூர் பொதுமக்களும், சுற்றுச் சார்பு வாழ் மக்களும் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

அந்தக் கூட்டத்தைக் கேட்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆயுதம் ஏந்தாதவர்களாவார்கள். அப்படிப்பட்ட நிராயுதபாணி மக்களை, ஆங்கில தளபதியாக இருந்த ஜெனரல் டயர் என்பான், துப்பாக்கிகளிலும் இயந்திரத் துப்பாக்கிகளிலும் இருந்த குண்டுகள் எல்லாம் தீரும் வரை, சுட்டேன். சுட்டேன், சுட்டேன் என்று சிட்டுக் குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளினான்.