பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கவிக்குயில் சரோஜினியின்

மக்களே! மேற்கண்ட கூட்டத்தில் கவிக்குயில் சரோஜினி வீராவேசமாகப் பேசியபோது குறிப்பிட்டதாவது:

★ “ஏ, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே இந்திய மக்களைக் கொடிய மிருகங்களை வேட்டையாடுவதுபோல வேட்டை ஆடலாமா?


நிராயுதபாணிகளாகக் கூட்டம் கேட்க வந்த நிரபராதிகளைச் சுட்டேன், சுட்டேன், வெடிமருந்து தீரும் வரைச் சுட்டேன் என்று ஜெனரல் டயர் வெறியாட்டமாடி குண்டடிப்போர் செய்தது நியாயமா? பிரிட்டிஷ் வீரம் இதுதானா? ஜனநாயகத்தின் தொட்டில் இங்கிலாந்து நாடு என்கிறீர்களே, இதுதான் அந்த ஜனநாயக வெறியாட்டமா? லட்சணமா?


பெண் குலத்துக்கு பெருமை தேடுகிறோம் என்று வாய் மேளம் அடிக்கும் பிரிட்டிஷ்காரர்களே. இந்தியப் பெண்களை அம்மணமாக நிறுத்தலாமா? ஆடைகளை அகற்றலாமா?

★ நிர்வாணமானப் பெண்களைக் கசைகளால் அடிக்கலாமா? கண்டபடி கற்பழிக்கலாமா? கதறி ஆழ ஆழ அவர்களைச் சித்ரவதை செய்யலாமா?

★ எனது நாட்டுச் சகோதரிகளை மானபங்கம் செய்தச் சண்டாளர்களை, நியாயத்திலும்-நாகரிகத்திலும் உயர்ந்தவர்கள் என்று டம்பமடித்துக்கொள்ளும் பிரிட்டிஷார் தண்டிக்காமல் விட்டது ஏன்?

மனிதாபிமானமே இல்லாத இந்த காட்டுமிராண்டிகளின் பயங்கரச் செயல்களை நடத்திய முரடர்களை, பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டியதே-அது நீதிதானா?

★ இந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த இந்திய மக்கள் ‘வெட்கம், வெட்கம்’ என்று கூக்குரலிட்டார்கள்.