பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கவிக்குயில் சரோஜினியின்

அந்த பொறுப்பை அரசு எடுக்காததால், பிரிட்டிஷ் என்னைப் பாராட்டி வழங்கிய 'கெய்சர் ஹிந்த்' என்ற பதக்கத்தை நான் அணிந்து கொள்ள முடியாது. அதனால் அதைத் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு அந்தப் பதக்கத்தை அனுப்பிவிட்டார்.

"பிரிட்டிஷ் அரசு பதக்கத்தை நான் அணிய மாட்டேன்; அது என் கெளரவத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கானது; இந்தப் பதக்கத்தை நான் அணிவேனானால், எனது தாய் நாட்டின் தன்மானத்தை அடகு வைத்தவளாகி விடுவேன் என்று அக்கடிதத்தில் தெரிவித்து திருப்பி அனுப்பினார்

கவியரசி சரோஜினி நாயுடு பிரிட்டிஷ் ஆட்சி வழங்கிய பதக்கத்தைத் திருப்பி அனுப்பிவிட்ட சம்பவம், பெரும் கிளர்ச்சிக்கான எழுச்சியை உண்டாக்கியது. கவியரசியைப் பின்பற்றி பலர் தமது பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்தார்கள். பஞ்சாப் சகோதரிகள் மானபங்கம் செய்யப்பட்டதால், பெண் சிங்கம் சரோஜினி சீறி எழுந்து கர்ஜனை செய்தது. இதனால் இந்தியாவின் எல்லா பகுதிகளுமே புதியதோர் விழிப்புணர்வு பெற்றது.

சரோஜின் தேவியின் இந்தப் பதக்கம் துறப்புச் சம்பவம் மற்ற நாடுகளிலும் ஒரு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நேரத்தில் கானாட்டுக் கோமகன், இந்தியா வருகை தந்தார். பஞ்சாப் படுகொலை சம்பவத்தால் இந்திய மக்கள் மனம் பூகம்பம் வெடித்துப் பிளவுபட்டிருப்பதை அக்கோமகன் கண்டார்.

இந்திய மக்கள் உள்ளத்தை சாந்தப்படுத்திட ஏதாவது செய்ய வேண்டுமே, அவ்வாறில்லாவிட்டால் நிலமை மிக்க விபரீதமாகிவிடுமே என்று அஞ்சியக் கோமகன், 'நடந்ததை மறந்து விடுங்கள்: என்று கூறி, பிரிட்டிஷ்