பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59

அறிக்கையும் எரியும் சென்னை அரசு நெருப்புக்குரிய காற்றாகப் மாறிப் பரவியது:

இந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு, கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் விடுத்த அறிக்கை ஒன்றில்:

“சரோஜினி தேவி பேசியதில் தவறு ஏதும் இல்லை; அவர் கூறியன எல்லாம் உண்மைதான்; கேரள ராணுவ ஆட்சியின் போது, மாப்பிள்ளை வகுப்பார் வாழ்ந்த இடங்களில் ராணுவ வீரர்கள் காட்டுமிராண்டித்தன பயங்கரங்களோடு அக்கிரமங்களைச் செய்தார்கள். அந்த விவரங்களை தேவியாருக்கு நான்தான் தந்தேன். அக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க நான் எப்போதும் தயார்" என்றார்.

இந்த அறிக்கை சென்னை அரசாங்கத்தின் எரியும் நெருப்புக்கு நெய்வார்த்து விசிறிவிட்டப் பேய்க்காற்றாக வீச ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் மந்திரி மாண்டேகு பட்ட அவமானம் போல சென்னை அரசாங்கமும் அவமானம் அடைய விரும்பவில்லையோ என்னவோ ஊமையாகி விட்டது.

ஒருநாட்டில் அந்நியர் ஆட்சி செய்ய பெரும் துணையாக இருப்பவை ராணுவமும்-போலீசும் தானே! அதனால் அந்த இரு சக்திகளை எந்த ஓர் அயலரசும் காட்டிக் கொடுத்திடத் துணியாது அல்லவா? அதனால், சென்னை அரசு ஊமையானது!

சென்னை ஆங்கிலேயர் ஆட்சி, சரோஜினி தேவியின் கொந்தளிப்பான குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள அஞ்சி, அவர் மீது தொடுத்த வழக்கு நோட்டீசையும் வாபஸ் வாங்காமல் பயந்து வெலவெலத்து பணிந்து விட்டது.