பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கவிக்குயில் சரோஜினியின்

தக்கது எண்ணிப்பார்த்து இதயம் நொந்து துடிக்கின்றது! தந்தையே! மகாத்மாவே! மீண்டும் எழுந்து வரமாட்டிரோ!


18. சரோஜினி கூண்டிலிருந்து குயில் புள் பறந்தது!


"குடம்பை தனித்து ஒழியப்புள் பறந்தற்றே;
உடம்போடு உயிரிடை நட்பு"

என்ற திருவள்ளுவர் பெருமான் எழுதிய திருக்குறள் தமிழ் மறைப்படி 'நிலையாமை என்ற தத்துவத்திற்கு ஏற்றவாறு, கவியரசி சரோஜினி என்ற உடம்புடன் நட்பாக இருந்த உயிர் என்ற குயிற்புள், 1949-ம் ஆண்டு மார்ச் வாதம் இரண்டாம் தேதி பறந்தோடி விட்டது.

காந்தியடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30-ம் நாள், காலத்தோடு கரைந்துவிட்டார்! அவரது மரணத்திற்குப் பிறகு, ஏறக்குறைய பதினைந்து மாதங்களுக்குள் கவிக்குயில் சரோஜினியும் தனது எழுபதாவது வயதில் மரணமெனும் காற்றோடு கலந்து விட்டார்.

இனிமையுடனும், வன்மையுடனும் காந்தியத் தத்துவக் கீதங்களை இசைத்துக் கொண்டிருந்த இன்னிசைக் குயில் ஆன்மா ஓய்ந்த விட்டது. என்றாலும், அவரது பொது வாழ்க்கைத் தொண்டுகள், தேசப்பற்றுடன் அவர் ஆற்றிய சேவைகள் தம்மை விட்டு மறையாமல் கானம் பாடிக் கொண்டே இருக்கின்றன.

இசையரசி சரோஜினி தேவியின் வாழ்க்கை நமக்கு ஒரு நாட்டுப்பற்றுப் பாடமாக அமைந்துள்ளத்தை எவராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.