பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

கம்பநாட்டாழ்வாரின் கம்பராமாயணம் எனும் பெருங்காப்பியமும், தெய்வச் சேக்கிழாரின் பெரிய புராணமும், கச்சியப்பரின் கந்தபுராணமும் இக் காலத்தே தோன்றின.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் தொண்ணுாற்றாறு வகைச் சிறு பிரபந்தங்கள் இக் காலப் பகுதியில் முகிழ்த்தன எனலாம்.

சோழர்கள் ஆட்சி மேம்பாடும், வெளிநாட்டு வாணிக நலனும், ஊராட்சிச் சிறப்பும், வளமனை வாழ்வும் புதிய இலக்கியங்களுக்குக் கால்கோள் செய்தன.

இக்காலப் பகுதியில் தோன்றியவரே ஒட்டக்கூத்தர்.

ஒட்டக்கூத்தர் பற்றிய என்னுடைய இக்கட்டுரையினை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காண நினைக்கின்றேன்.

முதலாவது பகுதி ஊரும் பேரும் என்பதாகும். இதில் ஒட்டக்கூத்தரின் ஊரும், அவர்தம் பேரும், அவர் பெற்ற பட்டங்களும் சிறப்பும் ஆராயப்படுகின்றன.

இரண்டாவது பகுதி, நூற்களும் அவை நுவலும் பொருள்களும் என்பதாகும். இப்பகுதியில் ஒட்டக் கூத்தர் தம் நூல்களும், அந்நூற்கண் பொதிந்துள்ள செய்தி களும் சிறப்புகளும் ஆராயப்பெறும்.

மூன்றாம் பகுதி ஆய்வும் முடிவும் என்பதாகும். இப்பகுதியில் ஒட்டக்கூத்தர் வாழ்வு பற்றியும் புலமை பற்றியும் எழுந்துள்ள பல்வேறு கருத்துகள் ஆராயப்பெற்று யான் முடிவாக எண்ணுகின்ற ஆராய்ச்சி முடிவுகளை வைத்துள்ளேன்.

செப்பலுற்ற பொருளின் சிறப்பினால் அப்பொருட்கு உரை யாவரும் கொள்வரால் என்றபடி, என ஆர்வத்தால் எழுந்த இச்சிற்றுரையை ஏற்க வேண்டுவல்.