பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

தமிழ் நாட்டு வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் பொற்காலங்கள் என்று குறிக்கப்படுவன இரண்டு காலங்களாகும். ஒன்று சங்க காலம்: பிறிதொன்று பிற்காலச் சோழர் காலம். சங்க காலத்தில் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் முதலானோர் புகழ் பூத்து விளங்கியது போன்று, பிற்காலச் சோழர் காலத்தில் தெய்வப் புலமைச் சேக்கிழாரும், கவிச்சக்கரவர்த்தி கம்பரும், கலிங்கத்துப் பரணி பாடிய சயங்கொண்டாரும், நளவெண்பா இயற்றிய புகழேந்தியும், தெய்வப் பரணியாம் தக்கயாகப்பரணி தந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரும் சிறப்பாகக் குறிப்பிடப் பெறத் தக்கவர்களாவர்.

"கோவை யுலா அந்தாதிக்கோர் ஒட்டக்கூத்தன்" எனும் பாராட்டு, சிற்றிலக்கியங்களாம் கோவையினையும் உலாவினையும் அந்தாதியினை யும் பாடிப் பெருஞ் சிறப்புப் பெற்றவர் ஒட்டக்கூத்தர் என்பதனை நன்கு வெளிப் படுத்துகின்றது. இவர் கவிராட்சதர், கவிச் சக்கரவர்த்தி, கெளடப் புலவர், சர்வஞ்ஞ கவி என்று பலவாறு பாராட்டப் பெறுகின்றார்.

இவர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் உறுதி செய்யப்பெற்ற ஒன்றாகும். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசரி சோழன் ஆகிய சோழப் பெருமன்னர் மூவர் காலத்திலும் ஒட்டக் கூத்தர் அவர்கட்குக் கல்வி கற்பித்த ஆசிரியராய்ப் பின் அரண்மனைப் புலவராய் இறுதியில் ஞானாசிரியராய் விளங்கித் தம் தொண்ணுற்றேழாவது வயதில் சிவகதி அடைந்துள்ளார்.

செய்யுந் தொழிலில் நிகரற்ற நெய்யுந் தொழிலை வாழையடி வாழையெனப் பரம்பரைப் பரம்பரையாக, கால்வழி கால்வழியாக மேற்கொண்டொழுகுபவர்களும், தமிழறிவிலும் தமிழ்ப் பற்றிலும், சிவசிந்தனையிலும், போர்புரியும் ஆற்றலும், நீதிநெறியிலும் புகழ் பூத்து விளங்குபவர்களுமாகிய செங்குந்தர் குலப்பெருமக்களிடையில் வானத்து நிலவாய் வந்துதித்தவர் ஒட்டக் கூத்தராவர்.

விலைதந்தார் தமிழினுக்குச் செங்குந்தர்

என் கவிக்கு விலையா கத்தான்
தலைதந்தார் எனக் கொட்டக் கூத்தனெனும்

பெயரினையும் தந்தார் தாமே.'