பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சாணக்கியனின் 'ஒருகுலத்துக் கொருநீதி'

ஆணுக்கும் பெண்ணுக் கும்தான்
ஆரிய ரானோர்க் கெல்லாம்
ஊனுக்கும், உடைக்கும் என்றும்
ஊறெதும் நேரா வாறே
'காணிக்கை’ எனவே மக்கள்
கைப்பொருள் கவரும் மார்க்கம்
சானக்கி யன்தான் அன்றே
சாமியின் பேரால் செய்தான்.

மதுக்கடை கறிக்க டைக்கும்
மறக்காமல் கட்டு திட்டம்
செதுக் கிடை வைத்தான்; மன்னர்
செயல்முறை வகுத்துச் சொன்னான்
புதுக்கிடை விளக்கா னேனும்
பொதுமக்கள் படிக்கு மாறே
ஒதுக்கிடை ஒருசொல் கூட
உரைக்காத பாவி யானான்.

பட்டிதொட் டிகளில் வாழும்
பாமர மக்கள், வாழ்வில்
கட்டவும் துணியில் லாமல்
களைத்துண்ணச் சோறில் லாமல்,
மட்டற்றுக் கெட்டுப் போக
மனத்தினில் சூது வைத்தே
வட்டிக்கு வட்டி வாங்கும்
வழக்கத்தைச் செய்து வைத்தான்

109