பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாந்தியும் நந்த னும்தாம்
சஞ்சலம் உற்றோர் ஆகி,
"மாந்தர்கள் மகிழ்ந்து வாழும்
மார்க்கத்தைக் காணா ரான
வேந்தர்கள் கெட்டார்: மற்றவ்
வேதியன் கெட்டான்; ஆகச்
சாந்துணை இவர்கள் கொள்கைச்
சங்காத்தம் வேண்டாம், என்றார்.


கவிஞன், நந்தன் குடும்பத்தோடு
நாகப்பன் வீடு செல்லல்


மாறிய மனத்த னாகி
மற்றும்தன் தமயன் வந்து
கூறிய தனைத்தும் ஆய்ந்து
குறித்துளம் கொண்ட நந்தன்,
ஆறிய கஞ்சி யாகா
தரும்பெரும் பயனுண் டாக்க,
மீறிய உவகை யோடும்
மேற்கொண்டு செயலென்” என்றான்.


“சனிநல்ல தாயிற் றென்று
சரித்திரம் எழுதப் பின்னர்,
இனிநல்ல மனித னாகி
இலங்குவான் தமயன், நந்தா!
கனிநல்ல தென்றால் நாமோ
கடும்பசி கொண்டோ ரானேம்;
நனிநல்ல செயலைச் செய்ய
நாள்வேறு வேண்டா மன்றோ?

111