பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தச்சர்கள், ஒட்டர், கொல்லர்,
தரமான தொழில்வல் லோரால்
குச்சுகள் பிரித்தெ றிந்து,
கூடிய பணத்தைக் கொண்டே
அச்சுகள் அமைந்த வாறாய்
அழகழ காக ஊரில்
மச்சுகள் எழுப்பி எங்கும்
மங்களம் பெருக வாழ்ந்தார்.

உழைப்பின் உயர்வு
தழைக்கின்ற பயிர்க ளுக்குத்
தண்ணீரைப் போல அன்றோ
உழைக்கின்ற மனிதன் கையில்
ஊதியம்; இதையோ ராமல்
பிழைக்கின்ற தென்றால், அந்தப்
பிழைப்பினைப் பெரிதும் பற்றி
இழைக்கின்ற தொல்லைக் கெல்லை
இருக்கின்ற தெங்கே? சொல்வீர்!

உணவொன்று மட்டும் அன்றோ
உயிர்முதல் பொருளாய் வேண்டல்;
உணவின்று தருவோர் தம்மை
உலர்த்திவிட் டுள்ளோ ரெல்லாம்
'உணவெ'ன்று கதறின் ஊழை
உணராமல், உணவுண் டாமோ?
'உணவன்று பொருளெ'ன் போர்கள்
உரைக்கட்டும் பதிலி ருந்தால்.

121