பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேழியைப் பிடித்தோன் தன்னை
மெதுவாக அமுக்கி விட்டு,
நாழியைப் பிடித்தோன் இன்று
நாயகம் நாட்டில் பண்ண,
ஊழியைப் பிடித்தோன் சும்மா
உட்கார்ந்த படிஒய் வின்றி ,
வாழியைப் பிடித்து வாழ்த்தின்
வையகம் வாழு மோதான்!

தம்மாட்டம் ஒய்ந்த தென்றே
தாமுண ராதோர் இன்னும்
சும்மாட்டின் மீது குந்திச்
சுமக்காத பார மாகிப்
பொம்மாட்டம் காட்டி வாழ்வர்,
பொதுஞானம் சிறிது மின்றி;
எம்மாட்டுக் கற்றார், 'மக்கள்
ஏற்றத்தாழ்' வென்னும் சொல்லை?

பழிப்பவன் வாழ்வை; உண்டு
பகலெல்லாம் வீணாய்க் காலம்
கழிப்பவன்; கடவுள் பற்றிக்
கதைகட்டி வாழ்வோர்க் கன்றி,
உழைப்பவன் தன்னைச் சார்ந்திவ்
வுலகத்தில் அரசு கண்டால்,
செழிப்பவன் அன்றி நாட்டில்
சீரழிந் தொருவன் காணான்.

122