பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


          கவிஞன் காரணங் கேட்டல், மறுத்தல்

          எரிகின்ற இதயம் தன்னை
          எவ்வாறோ ஆற்றிக் கொண்டு,
          புரிகின்ற மொழியில் மெல்லப்
          புகன்றனன் கவிஞன்: "நண்பா!
          தருகின்ற தனைத்தும் தெய்வம்
          தந்தபின் இனியும் சென்று
          வருகின்ற தெதற்காம் அங்கு
          வருந்திமெய் வாடு மாறு?

          காலிலே வலுவு குன்றிக்
          கன்று வீழ்ந் திறந்த தன்பின்
          தோலிலே நெல்லம் புல்லைத்
          துறுக்கியே கறக்கக் காட்டி,
          நாலிலே இரண்டு பங்கு
          நாடொறும் தவரா மல்தான்
          பாலிலே நீர்க லக்கும்
          பாவத்தைத் தீர்ப்ப தற்கோ?

          காமத்தைக் கருத்துள் கொண்டு
          கடவுளின் நிலையோ ராமல்
          நாமத்தை நெற்றிக் கிட்டு
          நாடொறும் உண்டு நன்றாய்
          ஊமத்தை மலர்போல் நீண்டே
          உருவத்தில் பெரியோ ராகி
          ஈமத்தை நிறைக்க வாழும்
          ஈனத்தை மறைப்ப தற்கோ?

11