பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துாரார் உயர்ச்சி கண்டு
அயலூரார் வியத்தல்

கற்கண்டுக் கிண்ணம் தன்னைக்
கண்டெறும் பூர்ந்த வாறே,
நெற்கொண்டு வண்டி பாதை
கெடுகிலும் செல்லக் கண்டே,
'முற்கண்ட தில்லை; மூத்தோர்
மொழிந்ததும் இல்லை;' என்ற
சொற்கொண்டு வியக்க லானார்,
சோறற்ற அயலூர்க் காரர்!

முத்துாரார் பெருமிதம்
சித்துாரில் வாழும் மக்கள்,
செலவுக்குக் காசில் லாமல்
செத்தாருக் காகக் கூடிச்
‘சிவன்செயல் எல்லாம்’ என்ன,
மத்தூரும் இசையைச் சார்த்தி
மலரூரும் சுரும்பு பாட
முத்தூரார் விடிய லுக்கே
மொழிந்தனர் முகமன் நின்று.

புத்தூரார் ஏலாமை
சத்தாரும் கறிகாய் நெய்பால்
சகலமும் விளைவித் தென்றும்
ஒத்தாரும் உழைப்போ ராகி
ஒன்றுபோல் ஒன்றி நின்றிம்
முத்தூரார் வாழ்தல் கண்டும்
மூடரா னோம்நாம் என்றே
புத்தூரார் நொந்தார். 'இங்கோர்
புலவன்தான் இலையே’ என்று.

123