பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“பித்தனென் றென்னை யேசிப்
பேசுவர் பெரியோ ரேனும்,
செத்தொழிந் திடுதல் இன்றென்
செயல்;செத்த பின்நீ செய்தல்,
சித்தனிங் கிறந்தான்; காக்கும்
சிவமாகித் திரும்பி னானென்
றுத்தம! உடனே சென்றிவ்
வூரினர்க் குணர்த்தல்,” என்றான்.

“சிவ சிவா, இச்சொல் என்றன்
செவிபடச் செப்ப வேண்டாம்;
தவசியும் ஆனீர்; உம்மைத்
தமயனாய்க் கொண்டுள் ளேன்யான்;
'கவசமிக் காசி னிக்குக்
கவிஞனே' என்பர் கற்றோர்.
அவசிய மாயின் முன் என்
ஆருயிர் தருவேன்,” என்றான்.

“சோற்றிலே சுவையைக் காணார்;
சுகங்காணார்; சோர்வுற் றோராய்க்
காற்றிலே, வெயிலில் பெய்யும்
கடும்பனிக் குளிரில், நாளும்
சேற்றிலே திரிந்தும், நின்றும்,
செய்வன அனைத்தும் செய்தே
மாற்றிலா துழைக்கும் மக்கள்
மனம்நொந்து மடிதல் கண்டும்,

22