பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிட்டன் மறைந்து கேட்டல்
பாரியை யொத்து யர்ந்த
பண்புடை நந்த னைத்தான்
கோரிய படியே கண்டு
குப்பையைக் கொட்ட வந்தோன்,
சீரிய கவிஞ னேதோ
செப்பிக்கொண் டிருக்க அங்கே
கீரியைக் கண்ட பாம்பாய்க்
கிளம்பினான் மறைந்து நின்றான்.

கவிஞன் உரைத்த பொருளுரை
“சோற்றுக்கும் சாற்றுக் கும்தான்
சொல்லொணாத் துயர முற்று,
நூற்றுக்குத் தொண்ணூற் றொன்றும்
நோஞ்சான்க ளாகி யின்று,
மாற்றுக்கோர் மருந்து மின்றி
மனம்மாழ்கி மடிதல் கண்டும்
ஏற்றுக்கொண் டறிஞர் சும்மா
இருப்பதும் இயல்வ தாமோ!

நீடிய தெய்வந் தன்னை
நெஞ்சிலே நிலையாய் வைத்துக்
கூடிய மட்டும் நல்ல
குறிக்கோள ராகி, ஊரில்
வாடிய மனிதர் கட்கு
வாழ்க்கையில் உதவி வாழ்வோர்,
தேடிய போதும் இந்தத்
தேசத்தில் ஒருவர் காணோம்.

39