பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாடிங்கு படுவோர் நொந்து
பட்டினி கிடந்து சாக
நாடெங்கும் நாவல் லோர்கள்
நயமான தமிழில் நாளும்,
மாடங்கள் கட்டி வாழும்
மனிதர்கள் சிலருக் காகக்
'கோடங்கி' எனப்பு ராணக்
கும்மாளங் கொட்டக் கண்டீர்!

கண்பெற்ற பயனாய் ஆயும்
கல்விப்பற் றறவே யற்று,
பெண்பற்றைப் பெரிதும் தூற்றிப்
பெரும்பொருள் பற்ற வுள்ள
மண்பற்றை மறுத்துப் பெற்ற
மக்கள்பற் றறுக்கக் கூறும்
பண்பற்ற பக்திப் பற்றால்
பாரதம் பாழா யிற்று!

ஊழ்வினை யென்னுஞ் சொல்லின்
உறுபொரு ளறியா தோராய்ப்
பாழ்வினை பலவும் பண்ணிப்
பணக்கார ராவோ ரேதான்,
தாழ்வினை பெருக்கி நாட்டில்
தரித்திரம் பெருக்கி வைத்து
வாழ்வினை குன்ற இன்றும்
வருத்தத்தை விளைவிப் போர்கள்.

40