பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

இந்த அவசர யுகத்தில், கணத்தில் உந்தியெழுந்து வெடித்து மறையும் உணர்ச்சிச் சூட்டில் மயங்க விரும்பும் புதிய தலைமுறையில், அமைதியோடும், தெளிவோடும், முன்னோடிக் காணும் நோக்கத்துடனும் ஒரு கவிஞன் தோன்றினால் அது போற்றற்குரியதல்லவா? கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்கள் அப்படிப் போற்றற்குரியவரே!

எளிமை, இனிமை, தெளிவு குன்றாது உண்மையையும் ஞாயத்தையும் கலையழகோடு வெளிப்படுத்துவது அவரது கவிதைகளின் தனிப் பண்புகள். அவைகளில் ஆழ்ந்து ஒலிக்கும் சத்தியத்தின் குரல் சமுதாயத்தின் கறையை நிச்சயமாகப் போக்கித் துாய்மைப் படுத்தும்: அங்கே நிமிர்ந்து நடக்கும் தர்மமும், அவர் முன்னோடிக் காட்டும் முடிபுகளும் மக்களுக்கோர் கைவிளக்கு; மடியக் கிடக்கும் சமுதாயத்துக்கோர் அருமருந்து!

‘பாரதிக்குப்பின் கவிஞன் இல்லை’—என்ற ஒரு வாதம் தலைகாட்டும் இந்த நேரத்தில், “இதோ” என்று எளிதில் சுட்டிக்காட்டத்தக்க வகையில் திரு. வெள்ளியங்காட்டான் அவர்கள் உயர்ந்து விளங்குகிறார் என்பதை இந்நூலைச் சுவைத்தவுடன் நீங்களும் உணர்ந்து மகிழ்வீர்கள் என்ற ஒரே நம்பிக்கையில் இதைப் பெருமையுடன் வெளியிடுகிறோம்.

இந் நன்னூலை வெளியிட எமக்கு வாய்ப்பளித்த ஆசிரியருக்கும், மற்றும் இந்நூல் வெளிவரப் பல்வேறு வகைகளில் உதவியாயிருந்த புலவர் பாலுசாமி, சோம. இர. ஆறுமுகம் மற்றும் நண்பர்கள் பலருக்கும் எமது உளங்கனிந்த நன்றி உரியதாகிறது.


பதிப்பகத்தார்