பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘நீருக்கு நிலமா தாரம்;
நிலத்தின்மேல் உழுது செல்லும்
ஏருக்கும் எருதா தாரம்'
என்னவே, இருந்து வாழும்
ஊருக்கா தார மாயிங்
குள்ளவன் வரவ ழைத்தால்,
யாருக்கும் மறுத்துக் கூற
ஆதார மெனவொன் றுண்டோ ?

அப்பன்க ளிரண்டு பேரும்
அழைப்பினுக் கிணங்கிச் செல்ல,
ஒப்பமாய் அமர வைத்தன்
றுபசார மாக மூன்று
'கப்பு'கள் காப்பி சூடாய்க்
கடுகவே கொணர ஏவிச்
சப்பியே உறிஞ்சி ஆரச்
சாப்பிட்ட பிறகு சொல்வான்:

“தம்பியும் தமயன் நானும்
தனித்தனி தானென் றாலும்
வம்பொன்று மின்றி நேற்று
வரையிலும் வாழ்ந்தா யிற்று.
கம்புகட் டாரி தூக்கும்
காலமுண் டாயிற் றின்று;
நம்புவீர் என்சொல்; சென்று
நந்தனுக் குரைப்பீர்!” என்றான்.

42