பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுதான் வெறுமை யேனும்
வேதனை சகித்துக் கொள்வோம்,
காடுதான் உழவு பண்ணக்
கண்கண்ட தெய்வம் போன்ற
மாடுதான், கறவை கன்று
மற்றகால் நடைதாம் மாண்டால்
ஓடுதான் எடுத்தி ரந்தெம்
உயிர்பேண ஒப்பா துள்ளம்.

'வேளாளன்' எனவே தோன்றி
வேண்டுவ பிறர்க்கு நல்கித்
தோளாளத் துணையாய்க் கொண்டு
தொன்றுதொட் டின்று காறும்
தாளாள னாக வாழ்ந்தோன்
தானிரந் துயிரைக் காத்தால்
நீளாழக் கடலால் சூழ்ந்த
நிலமாள்வார் உண்டோ பின்னும் !

இல்வேண்டி இருந்தோம், இன்புற்
றிளைக்காமல் பாடு பட்டுச்
சொல்வேண்டி வாழ்ந்தோம்; இன்றும்
சொல்லொணாத் துயரம் உற்றும்
நெல்வேண்டி நின்றோ மில்லை;
நேர்மையாய் விலையைத் தந்தே
புல்வேண்டி வாங்கிச் செல்லப்
புறப்பட்டு வந்தோம்,” என்றார்.

50