பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          “நோவன செய்தார் நோவர்,
          என்ற நூல் மொழியோ ராமல்
          சீவன மார்க்க மற்றுச்
          சீரழி வோர்கள் தம்மை,
          ஏவல ராகக் கொண்டே
          என்றென்றும் வாழும் ஊரைப்
          பாவிகள் சேர்த்த காசால்
          பாழாக்கல் பழக்கங் கண்டீர்!

          மறைவென ஒன்று மின்றி
          மனந்திறந் துரைப்பேன் இன்று;
          இறைவனெம் மிதயந் தன்னில்
          இருப்பனென் றுணர்ந்த அன்றே,
          குறைவெனக் கூற இந்தக்
          குவலயத் தெதுவும் இன்றி
          நிறைவுறும்! செல்வம் ஒன்றி
          நிலைபெறும் நல்வாழ்" வென்றான்.

          திருடர் மனந்திருந்தல்
          ‘எள்ளுவர் முகத்தில் காறி
          எல்லாரும் துப்பி நம்மைத்
          தள்ளுவர் சிறையில், என்று
          தலைதாழ்த்திக் கொண்டு நின்ற
          கள்ளர்கள் இருவ ரும்தான்
          காதினில் கருப்பஞ் சாறாய்த்
          தெள்ளிய தமிழை ஆய்ந்து
          தெளிந்தவன் செப்பக் கேட்டார்.

59