பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

ஐந்து


கிட்டனைக் காணாது நாகப்பன் தவித்தல்
பழிக்கஞ்சான் பாவத் திற்கும்
பயப்படா நாகப் பன் தான்,
ஒழுக்கந்தான் துளியும் இன்றி
'ஓம்சிவா' என்றெ ழுந்தும்,
வழக்கமாய் வந்து கிட்டன்
வாசலில் நிற்கக் காணான்;
'இழுக்காயிற் றேயோ? நேர்ந்த
தென்னவோ' என்றை யுற்றான்.

நேரமும் மெல்ல விட்டு
நீங்கிக்கொண் டிருக்க, நெஞ்சில்
பாரமும் மெல்ல வந்து
பருப்பதம் போலும் ஏறத்
தாரமும் தானும், துப்பு
தருபவர் யாரும் இன்றி
வாரமும் தவித்து மெத்த
வருந்திடக் கழிந்த தன்றே.

61