பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          நாகப்பன் இரங்குதல்
          ‘சுற்றத்தில் பகைவந் துற்றுச்
          சுகம்முற்றும் அற்றோம்' என்று
          முற்றத்தில் வந்து நின்று
          மூங்கைபோல் விழித்தான் மூடன்.
          'செற்றத்தில் வெல்ல லுற்றுச்
          செய்தநம் முயற்சி யெல்லாம்
          குற்றத்தில் முடிய நேரக்
          கூடுமோ' எனவும் நொந்தான்.

          'ஏன் செய்தேன் இவ்வா' ரென்றான்;
          'என்னினிச் செய்வ' தென்றான்;
          'தான்செய்த தற்கு மாறாய்த்
          தம்பிசெய் வானோ?' என்றான்;
          'நான்செய்த செயலில் யாதும்
          நல்லதே இல்லை என்றான்;
          ‘ஊன்செய்த உடலை விட்டின்
          றுயிர்நீங்கின் சுகமோ?' என்றான்.

          மிகைசெய்து நானே முந்தி
          மெத்தவும் தீங்கு செய்தும்
          பகைசெய்து திருப்பி ஏதும்
          பண்ணாமல் அவனி ருந்தால்,
          நகைசெய்து ஞாலம் என்னை
          நன்றாகத் தூற்றும்; என்ன
          வகைசெய்து வாழ்வேன் நெஞ்சு
          வருந்தாமல் இனிநான்,' என்றான்.

62