பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          ‘உற்றாரை வேண்டேன் ; மற்றும்
          ஊர்வேண்டேன்; பேரும் வேண்டேன்
          கற்றாரை வேண்டேன்; சாலக்
          கற்பன அமையும்; நாளும்
          குற்றாலத் தமர்ந்த கூத்தன்
          குரைகழல் ஒன்றை மட்டும்
          சற்றாவின் மனத்தைப் போலக்
          கசிந்துவேண்டுகிறேன்,' என்றும்,

          'பச்சைமா மலைபோல் மேனி,
          பவள வாய் கமலச் செங்கண்
          அச்சுதா! அமரர் ஏறே!
          ஆயர்தம் கொழுந்தே! என்னும்
          இச்சுவை தவிர யான்போய்
          இந்திர லோகம் ஆளும்
          அச்சுவை தரினும் வேண்டேன்
          அரங்கமா நகரோய்!' என்றும்,

          ஏடொன்றை ஏந்திக் கையில்
          இன்னிசைத் தேனாய் நாளும்,
          பாடுவோ ரேனும், கேட்டுப்
          பரவசப் படுவோ ரேனும்,
          காடென்றும் கரையென் றும்போய்க்
          கடும்பகல் முழுதும் காத்து
          நாடென்று துலங்கப் பாடு
          நலமுறப் படுவ துண்டோ ?

65