பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          முப்பத்து மூன்று கோடித்
          தேவர்க்கும் முறையாய்ப் பங்கின்
          பப்பத்துக் கோடி தேறும்
          பாமாலை வண்ணம், சிந்து,
          ஒப்பித்த முற்று மோனை,
          யமகவெண் பாக்கள்! கேட்டுத்
          ‘தப்பித்துப் பிழைத்தோம் கற்கள்
          தாமான தால்நாம்' என்னும்,

          சாமிகள் நிற்க; மற்றிச்
          சகத்தினில் கலைத்தாய் ஆன
          நாமகள் துணையாய் நிற்க,
          நாமினிச் செய்வ தெல்லாம்
          கோமகள் ஆணை யோங்கக்
          கொடுக்குந்தாய் ஆன இந்தப்
          பூமகள் தன்னைப் போற்றிப்
          பொலிந்திடச் செய்வ தொன்றே.

          உழைப்பவர்க் குரிய தன்றோ
          உலகத்துப் பொருள னைத்தும்!
          உழைப்பவர் பொருளை வீணாய்
          உண்பவர் பறித்துக் கொள்ள,
          உழைப்பவர் உணவும் இன்றி,
          உடையின்றி, உறையுள் இன்றி,
          உழைப்பினால் உடலுந் தேய்ந்தே
          உயிர்விடல் காணீ ரோநீர்?

66