பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          அடைவைத்துக் குஞ்சைப் பேணி
          அருமையாய்ப் பாது காத்தால்,
          பெடைவைத்துக் கொண்டு சேவல்
          பிரித்துவிற் றிடலாம்; பேணார்
          தடைவைத் திங் குதவா ரேனும்
          தவிக்காமல் இருந்து நன்றாய்க்
          கடைவைத்து விற்றுக் காலம்
          கழிக்கலாம் என்றான் , நந்தன்.

          கவிஞனின் உலகியலறிவு
          பொங்கிய உவகை யாலே
          பூரித்துக் கவிஞன் சொல்வான்:
          'கொங்கு நாடெங்கும் கேட்டுக்
          குதுகலம் கொள்ளு மாறித்
          தங்கைக்குக் கோழிப் பண்ணை
          தனையமைத் தளித்தால் நீ,என்
          பங்குக்கு நானும் கொஞ்சம்
          பண்ணுதல் கடமை யன்றோ?

          முழம்இரண் டகலம் நீளம்,
          முழம்முக்கால் ஆழம் தோண்டிப்
          பழமண்ணை எடுத்துப் போட்டுப்
          பள்ளத்து வண்டல், கோழிக்
          கழிவுடன் சாம்பல் குப்பை
          கலந் திட்டு நிரப்பி, ஆடி
          விழவுநாள் அவரை நட்டால்
          வீடெல்லாம் காசே ஆகும்!

86