உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களும் வெளிச் செல்லும் வழிகளும் உண்டு. ஒரே மனிதன் அவனுக்குரிய நேரத்தில் பல பாகங்களை நடிக்கவும் செய்கிறான்," என்று கோடிகாட்டிவிட்டு, அப்பால், மனிதனுடைய ஏழு பருவ வாழ்வின் கதையை விளக்கி, அதிசயமானதும் குறிப்பிடத்தக்கதுமான இவ்வாழ்க்கையின் சோக மயமான கடைசி அத்தியாயத்தையும் கண்ணீர் கொட்டிச் சுட்டிய பிறகு, சூன்யப் பெருவெளியை நமக்குக் காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார் மேதை.

ஷேக்ஸ்பியர் காட்டிய வெறுமை வெளியில் தான் ஆண்டவன் எனும் ‘அளப்பரிய சக்தி’ ஊர்த்துவ நடனமிடுகிறதென்னும் உண்மையை உணர முடிந்தவனே கவிஞன். சூத்திரதாரியாக திரைமறைவில் இயங்கி, வாழ்வு நாடகத்தை இயக்கும் அந்தச் சத்தியத்தின் திரு உருவம்தான், அழியும் இகவாழ்வை ‘இன்னும் விளங்காத அதிசயமாக’ ஆக்கிக் காட்ட வேண்டும்!

கண்டு வியக்கின்ற காட்சியுண்டு பல
கற்பனை வல்லமை கற்றதுண்டு:
உண்டறி வென்னும் உபாயமுண்டு கிளர்
உள்ளத் துணர்ச்சியின் ஊற்றுமுண்டு
செப்படி வித்தைகள் செய்தபின்னும் கோடி
சென்மம் எடுத்துச் சிறந்த பின்னும்
எப்படி வாழ்வதிங்கு என்பதே மானிடர்க்கு
இன்னும் விளங்காத அதிசயமே!”

23