பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞரைச் சந்தித்தேன்

1. கடவுள் தந்த பொருளல்லவோ?

மூவண்ணச் சித்திரம் ஒன்று. பச்சிளங் குழவி ஒன்றை அண்ணல் காந்தியடிகள் முத்தமிடுவது போன்ற காட்சியைச் சித்தரித்த படம் அது. பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை. அந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆர்வம் என்னுள் ஓடுகிறது. ஓடுகின்ற ஆசைத் தவிப்புக்கு எல்லை கட்ட முடியாதல்லவா? அதைப்போலவேதான், குழந்தைகளைப் பற்றிய இனிய ஆர்வத்துடிப்பும் என்வரை அடக்க முடியாததோர் உணர்வாகச் சுற்றுகிறது.

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்!” என்பார்கள். மெய்தான். தெளிந்து, கண்டு சொன்ன தேனமுதக் கனி வாய்க்குச் சர்க்கரைதான் தூவ வேண்டும். மதலைகளைப் பார்ப்பதென்றல், தெய்வத்தைத் தரிசித்த இதய நிறைவு ஏற்படுகிறது. குழவி என்றதும், என் குழந்தை இதோ, ஊறும் நகைப்புடன், சொட்டும் எச்சிலுடன், நகைபுரிகிறது. இவன்தான் என் ஜீவன்; இவன் தான் எனக்கு உயிர். ஆண்டவன் நல்லவன். ஆண்டவனையே இவனிடம் தரிசிக்கிறேன்.