பக்கம்:கவிஞர் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலர்

13



ணியபோது அந்தக் கருத்தை விட்டொழித்தார். அவர்களை நல்ல இடத்தில் சேர்ப்பதே முதல் கடமை என்று தீர்மானித்தார். அதன்மேல் அவர்களை அழைத்துக்கொண்டு திருக்கோவலூருக்கு அருகில் ஒரிடத்தில் பாதுகாப்பாக இருக்க வைத்துச் சென்றார்.

சில சிற்றரசர்களிடம் சென்று பாரியின் பெண்களை மணந்து கொள்ளும்படி கேட்டார். அவர்கள் மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். தாம் அவர்களை மணந்துகொண்டால் சேர சோழ பர்ண்டியர்களின் விரோதம் தமக்கு ஏற்படுமோ என்ற பயம் அவர்களுக்கு. பாரி இருந்தபோது அந்தப் பெண்கள் இருந்த செல்வ நிலையையும் இப்போது இருக்கும் நிலையையும் எண்ணி, அவர் உருகினார். எப்போதும் பாரியுடன் இருந்து, பொழுது போக்கி இன்புற்ற அவருக்கு, அவன் இல்லாத உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை. அவர் நினைத்த காரியமும் நிறைவேறவில்லை. அதனால் பின்னும் உலக வாழ்க்கையில் வெறுப்பு உண்டாயிற்று. சேர அரசனிடம் சென்று அவனைப் பாடிப் பொன் பெற்று வந்து, அங்கவை சங்கவைகளிடம் அளித்தார். பின்பு ஒளவையாரைக் கண்டு அவரிடம் அப்பெண்களே ஒப்படைத்து விட்டுக் கையை உதறிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

எங்கே? அவர் பாரி இருக்கும் இடத்துக்குப் போகவேண்டும் என்று துடித்தார். இந்த உடம்புடன் போக முடியுமா? திருக்கோவலூருக்கு அருகில் ஓர் இடத்தில் தீயை மூட்டி அதிலே பாய்ந்து உயிரை நீத்தார். அவ்விடத்தில் இன்றைக்கும் கபிலக் கல் என்ற ஒரு கல் இருக்கிறது.

பாரிக்கும் கபிலருக்கும் இடையே இருந்த கட்பின் உயர்வைத் தமிழுலகம் முழுவதும் பாராட்டியது. பாரியின் சிறந்த குணத்தில் ஈடுபட்டு அவனுக்கே தம் தமிழையும் உயிரையும் கொடுத்த கபிலரைத் தமிழ்ப் புலவர்கள் தெய்வத்தைப்போல் போற்றினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/15&oldid=1525694" இலிருந்து மீள்விக்கப்பட்டது