பக்கம்:கவிஞர் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கவிஞர் கதை



போதுஅடக்குவதைவிட இப்போதே ஒழித்துவிடலாம் என்று எண்ணினேன்” என்றான் அரசன்.

“அரசே! மலையமானைக் கொடியவன் என்றா சொல்கிறாய்! இன்று தமிழுலகம் முழுவதும் அவனைப் போற்றுகிறது. அவன் உனக்கு என்ன தீங்கு செய்தான்? இந்தக் குழந்தைகள் உனக்கு என்ன தவறு செய்துவிட்டார்கள்? பாலைவனத்தில் வழியே போகிறவர்களை இரக்கம் இல்லாமல் கொல்லும் வேடன் செய்யும் செயலல்லவா இது? உன்னுடைய மரபைப்பற்றிச் சிந்தித்தாயா? சிபிச்சக்கரவர்த்தியின் வமிசம் என்றல்லவா உன் மெய்க் கீர்த்தி சொல்கிறது! அந்தச் சிபி என்ன செய்தான் என்பதைச் சற்றே நினைந்து பார். ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தன் சதையை அரிந்து கொடுத்தான்! தானே தராசில் ஏறி நின்றான்! அவனுடைய மரபில் வந்த நீயா இந்தக் கொலை பாதகத்தைச் செய்யத் துணிந்தாய்!” கோவூர்கிழார் சிறிதே நிறுத்தினார்.

கிள்ளிவளவன் நெற்றியில் வேர்வைத் துளிகள் புறப்பட்டன. அவற்றைத் தன் கையால் துடைத்துக்கொண்டான். ஒன்றும் பேசாமல் இருந்தான். மறுபடியும் கோவூர்கிழார் சொல்லலானார்.

“இவர்கள் யார் தெரியுமா? என்னேப்போலத் தம்முடைய புலமையையே விவசாயமாகக் கொண்டு வயிறு பிழைக்கிறவர்களுடைய துன்பத்தைத் தன் துன்பமாக ஏற்றுக்கொண்ட வள்ளலினுடைய குழந்தைகள். தனக்குக் கிடைத்தவை எல்லாவற்றையும் புலவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களுடைய நெஞ்சிலும் நாவிலும் பாவிலும் வாழ்கிறவனுடைய குழந்தைகள்! பச்சிளம் பாலகர்கள். இவர்களைக் காப்பாற்ற வேண்டியது நல்லோர் கடமை. அப்படி இருக்க இவர்களைக் கொல்லத் துணிந்தாய்! நான் கொலேக்களத்துக்கு இப்போதுதான் போய் விட்டு வருகிறேன். அங்கே கண்ட காட்சி என் உள்ளத்தை உருக்கிவிட்டது. வந்த அழுகையைத் தடுத்துக்கொண்டேன்.”

இங்கே சற்று நிறுத்தினார். மன்னன் சற்றுக் கூர்ந்து கவனித்தான். அவன் முகத்தில் நிழல் படர்ந்தது.

“அந்த இரண்டு இளங் குருத்துக்களும் அழுதுகொண்டிருந்தன. தம் உயிரை வாங்கப் போகிறார்கள் என்று அல்ல. அவர்களுக்கு அது தெரியாது. புதிய இடம், புதிய மனிதர்கள், ஆகையால் அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/32&oldid=1525757" இலிருந்து மீள்விக்கப்பட்டது