பக்கம்:கவிஞர் கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழனைக் காத்த மோசியார்

33



நகரம் இருக்கிறது. இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேர்ந்திருக்கிறது. அந்த நகரத்தில் சேரன் ஒர் அரண்மனை கட்டினான். சில காலம் கருவூருக்கு வந்து, அந்த அரண்மனையில் தங்குவான். அரண்மனையில், மேலே அவனுடைய அரசிக்குரிய மாளிகை இருந்தது.

ஒரு சமயம் அந்துவன் கருவூருக்கு வந்து தங்கியபோதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவன் அரசியின் மாளிகையின் மேல் மாடத்தில் திறந்த வெளியில் கிழக்கு நோக்கி நின்றுகொண்டிருந்தான். அவனுடன் மோசியார் என்ற புலவரும் இருந்தார். அவர் முடவராதலால் முடமோசியார் என்று சொல்வார்கள். முடம் என்பதை யாரும் குறைவாக நினைக்காமல் அவரிடம் தமிழ் மக்கள் மதிப்பு வைத்துப் பாராட்டினார்கள். அவரும் சேர அரசனோடு அங்கே இருந்தார்.

அந்துவன் நெடுந்தாரத்தில் ஒரு யானை வேகமாக ஓடி வருவதையும் அதற்குப் பின்னால் ஆயுத பாணிகளாகப் பலர் வருவதையும் கண்டான். கருவூரின்மேல் யாராவது படையெடுக்க வந்து விட்டார்களா? யானையின்மேல் இருப்பவன் யார்? எதற்காகத் துரத்துகிறார்கள்?-சேர அரசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

அருகில் இருந்த புலவரான மோசியாரைப் பார்த்து, “அதோ பாருங்கள் ஒரு யானையை. அதன்மேல் யாரோ தெரியவில்லையே!” என்றான். புலவர் பார்த்தார். அவருக்கு உண்மை விளங்கிவிட் டது. யானை உறையூரிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

புலவர் முடமோசியாரும் உறையூரில் வாழ்கிறவர். பெரிய நகரங்களில், மேலே ஏறிப் பார்த்தால் ஊர் முழுவதும் நன்றாகத் தெரிவதற்குரிய கோபுரம் ஒன்று இருக்கும். அதை நகர் காண் ஏணி என்பார்கள். உறையூரில் அந்த ஏணி இருந்த இடத்தை ஏணிச்சேரி என்று சொன்னார்கள். அவ்விடத்தில் மோசியார் வாழ்ந்து வந்தார். அரசர்களுக்குள் நட்பானாலும் பகையானாலும் புலவர்களிடம் அதைக் காட்ட மாட்டார்கள். போர் நடந்து கொண்டிருந்தாலும் புலவர்கள் ஒரு நாட்டிலிருந்து அதற்குப் பகையான நாட்டுக்குப் போவார்கள். அவர்களை யாரும் ஏதும் செய்ய மாட்டார்கள். தமிழ்ப் புலவர்களிடம் அக்காலத்து மன்னர்களுக்கும் மக்களுக்கும் அவ்வளவு மதிப்பு இருந்து வந்தது.

கவிஞர் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/35&oldid=1525774" இலிருந்து மீள்விக்கப்பட்டது