பக்கம்:கவிஞர் கதை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கவிஞர்கதை




தெரிந்திருந்தால் நான் வாங்கிக்கொண் டிருக்க மாட்டேனே. அரசன் வாழ்ந்தால் எல்லோருக்கும் நல்லது. நான் கிழவி; நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்!” என்று வருந்தினாள்.

அதிகமானோ, "நான் ஒரு காட்டுக்கு அரசன். நீங்களோ தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு உள்ளவர்கள். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு காலம் உங்களுடைய கவியினால் தமிழ் மக்களுக்கு நன்மை உண்டாகும்” என்று சொன்னான்.

”இந்த உபகாரத்தைச் செய்த நீ, நஞ்சை உண்டும் இறவாமல் வாழும் சிவபெருமானைப்போல நீடு வாழ்வாயாக!” என்று வாழ்த்தினாள் ஒளவை. அதுமுதல் அதிகமானிடம் ஒளவை மிக்க மதிப்புடையவளாக இருந்தாள். அவனைப் பாராட்டிப் பலபாடல்கள் பாடினாள்.

காஞ்சீபுரத்தில் ஒரு தொண்டைமான் வாழ்ந்திருந்தான். அவனைப் போய்ப் பார்த்து வரும்படியாக அதிகமான் சொன்னான். அப்படியே ஒளவை தொண்டைமானிடம் சென்றாள். அந்தப் புலமை மிக்க பெண்மணியைக் கண்டு, தொண்டைமான் வரவேற்று உபசரித்தான். தன் அரண்மனையெல்லாம் கொண்டு போய்க் காட்டினான். படைகள் வைத்திருக்கிற ஆயுதசாலையையும் காட்டினான். அதைப் பார்த்தபோது ஒளவைக்கு அதிகமானுடைய வீரம் நினைவுக்கு வந்தது.

தொண்டைமான் பலவகை உபசாரம் செய்துவிட்டு, "தங்கள் வாக்கால் ஏதாவது சொல்லவேண்டும்” என்றான். அரசர்கள் புலவர்களிடம் பாட்டுப் பெறுவதற்கு ஆசைப்படுவார்கள். தொண்டைமானுடைய பெருமையை அதற்கு முன் ஒளவை கேட்டதில்லை. போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அவனைப் பற்றித் தெரிந்திருக்கும். அப்படி எந்தப் போரிலும் அவன் கலந்துகொண்டதாகவும் தெரியவில்லை.

தொண்டைமானோ கவி பாடும்படி கேட்டுவிட்டான். அதிகமான் சொன்னதனால்தான் அவள் அங்கே வந்தாள். அந்த மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? ஆதலால் ஒரு பாட்டுப் பாடிவிடலாம் என்று நினைத்தாள். பாட்டும் பாடிவிட்டாள். ஆனால் பாட்டு அந்தத் தொண்டைமானைப் பாராட்டியதாக இருக்கவில்லை; அதிகமானைப் பாராட்டின பாட்டாக இருந்தது. அதில் என்ன சொல்லியிருந்தாள் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/4&oldid=1525677" இலிருந்து மீள்விக்கப்பட்டது