பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கவிதையும் வாழ்க்கையும்


பயன்படும் என்று யாராவது முடிவு கட்டுவார்களாயின், அது தவறாகவே முடியும். உவமம் அதற்குப் பயன்படுவதோடு கவிதை நலத்தை உயர்த்தவும் பயன்படுகின்றது. கவிஞன் கற்பனைத் திறனைக் காட்டவும் உவமை பயன்படுகின்றது. மேலை நாட்டுப் புலவர் ஒருவர், 'உவமையற்ற கவிதை கவிதையே ஆகாது' என்று சொல்லுகின்றார்! அக் கவிதை, 'புனையாத புகையுண்ட ஓவியம் போன்றது' என்பது அவர் கருத்து. எனவே, உவமை என்பது கவிதைக்கு இன்றியமையாத ஒரு பொருளாய் அமைவதோடு, அக் கவிதையின் ஏற்றத்தையும், அதைப் பாடிய கவிஞனின் கற்பனைத் திறனையும் விளக்க வரும் ஒன்று என்பது நன்கு புலனாகும். உவமை என்பது இரண்டு சிறந்த பொருளை இணைக்கும் ஒப்பற்ற பாலம் என்கின்றார் 'லையான்' என்ற அம்மேனாட்டு ஆய்வாளர்.[1] இரு பேரூர்களைப் பிரிக்கும் ஆறுகளுக்குப் பாலம் இடுவதைக் காண்கிறோம். அப் பாலத்தால் ஆற்றின் இருபக்கத்து நலன்களையும் ஒரு சேர அல்லலின்றி அனுபவிக்க முடிகின்றது. அது போன்று இரண்டு பொருள்களை நமக்குப் புலனாக்கி மகிழ்வளிக்கும் பாலமே உவமை என்பது அவர் கருத்து. மேலும், இவ்வுவமை நலம் பற்றி அவர் நன்கு விளக்கியுள்ளார்.

இரண்டு பொருள்களை ஒப்பு நோக்கிக் கண்டு, அவற்றின் தன்மை முதலியவைகளை விளக்குவது உவமைதான். என்றாலும், உலகில் எந்த இரண்டு பொருள்கள் ஒத்திருக்கின்றன? தோற்றத்தாலோ, பண்பாலோ பிற வகைகளாலோ ஒத்திருக்கின்ற இரு மனிதரை எடுத்துக்காட்ட முடியுமா? எப்படி முடியும்? அதைப் போன்றே உலகில் வாழும் எல்லாப் பொருள்களிலும், இரண்டு ஒரே வகையில் இருப்பதைக் காண முடியாதே! எனவே. எப்படி இரண்டினைப் பாலத்தால் பீணித்து ஒற்றுமைப்படுத்திக் காட்டுவது? ஆம்; ஓரளவு இயலாத ஒரு பெரும் புதிர்தான் அது. அனைவரும் அத்துறையில் வல்லவராகி விடுவர் என்று கூற முடியாது. எத்தனையோ


  1. The Discovery of Poetry, by P.. H. B. LYON.