பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

139


காட்டுவதில் தவறில்லை என்றாலும், அவ்வாறு பச்சையாகக் காட்டுவது நாகரிகமாகுமா? அது பண்பாடு மல்லவே! தவறு செய்பவர்தம் குற்றத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டும்: ஆனால், அவர்தம் கொடுமையும் நேருக்குநேர் தெரியாமல், நாகரிகமாகவும் இருக்க வேண்டும். இவற்றை யெல்லாம் எண்ணிய திருவள்ளுவர் உவமை முகத்தான் தாம் கொண்ட கருத்தை விளக்குகிறார். ஒன்று கண்டு மேலே செல்வோம்: தேவரைப் பற்றியும் அவர் உலகம் பற்றியும் இலக்கியங்களும் இலக்கணங்களும் நெடுங்காலமாகப் பாடியுள்ளன. தேவர் உலகம் நம்முடையதிலும் மேம்பட்ட ஒர் உலகம் என்று சாதாரண மக்கள் கருதினபோதிலும், அறிவறிந்த மக்கள் அதை இழிவாகவே கருதுகின்றர்கள். ஆண்டவனைப் பாடும் அடியவர்களுங்கூட அந்த வாழ்வை வெறுத்துத்தான் ஒதுக்கியுள்ளார்கள். ‘இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்!’ என்று அந்த உலகத் தலைமைப் பதவியை வேண்டாவென ஓர் ஆழ்வார் ஒதுக்கியுள்ளார். தேவர் உலகம் போன்றவற்றை மறந்தும் நினைக்கவேண்டாவென்று கம்பர் ‘துறக்கமே முதலவாய தூயன யாவையேனும் மறக்குமா நினையல்’ என்று காட்டி, அவை அழியக் கூடியன என்கின்றார். தேவருலகம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டா. உண்டாயின், அது நம் உலகினும் உயர்ந்ததா அன்றித் தாழ்ந்ததா என்பதே நமக்குத் தெரிய வேண்டும். அறிஞர் பலருடைய கருத்து அவ்வுலகு இம்மனித் உலகத்திற்குத் தாழ்ந்ததுதான் என்பது. இலக்கண நூலில் உயர்திணை கூற வந்த இடத்தில், இதனாயே மக்களே முதலில் வைத்து, ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’, என்று கூறியதாகக் கொள்ளுவர். சாதாரணப் புலவர்களுக்கே இக்கொள்கை உடன்பாடாயின், இதை வள்ளுவர் ஒதுக்கிவிடுவரோ! ஏதோ தேவர் உலகம் நம்முடையதினும் பெரியது என்றும், அதை நாடவேண்டும் என்றும் பலர் அக்காலத்திலும் அவர் காதில் விழும்படி பேசியிருந்திருப்பர்; அவர் அக் கொடுமையைக் கேட்டிருப்பார்: தேவர் உலகம் நம்முடையதினும் மட்டமானது என்று கூற விரும்பியிருப்பார். அப்படியே நேரிடை