பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கவிதையும் வாழ்க்கையும்


என்பது பொருந்தும். இந்த நிலை தமிழ்க் கவிதைக்கு மட்டும் பொருந்துவதன்று; ஆங்கிலப் பேராசிரியர் ‘கோல்டுஸ்மித்து’ என்பவர் இந்த உவமையை எடுத்தாண்ட விதத்தைக் காணல் நலம் தருவதாகும்.[1] அவர் மலையையும் மாண்புடையார் நிலையையும் ஒன்றுபடுத்துகின்றார். மலையின் உச்சி மாண்புடையார் நிலையை ஒத்தது என்கின்றார். அறிவறிந்து ஆன்றவிந்தடங்கிய சான்றோர் உலகிடை வாழினும் அவர் உள்ளமெல்லாம் உயர்ந்த எண்ணத்தே பொருந்தி, உலகை வாழ்விக்கும் நெறியிலே திளைக்கும் என்பது அவர் கூறவிரும்பிய பொருள். அதற்கு உவமையாக மலை முன்னின்றது. மலையின் இடையில் மேகமும் பிறவும் தழுவி நின்று உச்சியைக் காணா வகையில் மறைக்கும். ஆயினும், அதன் உச்சி அவற்றால் மறைக்க முடியாத ஒன்று. அந்த உச்சியில் இந்த மாசுகள் செல்லா. அவ்வளவு உயர்ந்தது அதன் உச்சி. அந்த உச்சியில் என்றென்றும் மங்கா ஒளி விளங்கிக் கொண்டே இருக்கும். அதுவே ஆன்றோர் எதற்கும் அசையா உள்ளத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுப் போற்றப்படுகின்றது. ஆங்கிலக் கவிதைகளைப் பயின்று நலம் காணுவோர் இந்த உவமையைப் போற்றாதிரார் என்பது திண்ணம். நம் பவணந்தியாரும் சிறந்த ஆசிரியருக்கு மலையை உவமையாகக் கூறியிருப்பதும் நாம் ஈண்டு நினைவுகூர்தற் பாலது.

சாதாரண உவமைகளைக் கண்டோம். இனி உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் இரண்டனையும் கண்டு இப்பகுதியை முடிப்போம். இரண்டிற்கும் வேறு மேற்கோள்களைக் கொள்வதைக் காட்டிலும் தொல்காப்பியத்தில் நச்சினார்க்கினியர் கொண்டவற்றையே கொண்டு, நாமும் செல்லுதல் நல்லது என நினைக்கிறேன்.


  1. ‘As some tall cliff, that lifts its awful form Swells from the vale, and midway leaves the storm Tho' round is breast the rolling clouds are spread Eternal sun shine settles on its head’—Goldsmith