பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

147


ஒத்து முடிந்தமையின். முன்னின்ற 'நாட' என்பது உள்ளுறை உவமம் அன்றாய் இறைச்சியாம். என்னை? தன் கன்றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்கு உயிரைக் கொடுக்கின்ற தினையைத் தான் உண்டு அழிவு செய்கின்றாற்போல, நீ நின் கருமம் சிதையாமல் பார்த்து எமக்கு உயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மை இறந்துபடுவித்தல் ஆகாதென்ற உவமை. எய்திற்றேனும், பின்னர் நின்ற பொருளோடு இயையாது, இவ்வுவமை உள்ளுறையுற்றுப் பொருள் பயவாது, இறைச்சியாகிய ‘நாடன்’ என்பதனுள்ளே வேறோர் பொருள் தோற்றுவித்து நின்றதோ மாதலின். ‘முலை மாந்த’ என்றது. தன் கருமம் சிதையாமல் பார்த்தென்னும் துணையன்றி உள்ளுறை உவமப்பொருளை முற்ற உணர்த்தாமை உணர்க." என்று நன்கு விளக்குகின்றார். இதை விளக்குவது அவ்வளவு எளிதன்றுதான். அதனாலே தான் தொல்காப்பியனாரே, ‘திறத்தியல் மருங்கின் தெரியுமோர்க்கே’, என்று நன்கு ஆராய்ந்தறிந்துகொள்ளும் நல்ல திறன் வாய்ந்தோர்க்கன்றி இவ்விறைச்சிப் பொருள் விளங்காது என்கிறார். பார்த்தால் உள்ளுறை உவமம் ஒத்திருக்கின்றது. என்றாலும், முற்றும் உள்ளுறையாகவும் இல்லை. வெளிப்படை உவமம், உள்ளுறை உவமத்தைச் சார்ந்து நின்றது போன்று இங்கும் நின்றதாகக் காணினும், அதன் பொருளின் அமைப்பு முறையிலே வேறுபடுகின்றது. அங்குக் காணும் ஊரனைப் பற்றி விளக்கவருகின்ற அத்துணைத் தொடர் பொருளும் இங்குக் காணும் ‘நாடனை’ உள்ளுறை உணரவைக்கும் நிலையில் இல்லை. 'நாட'னிடத்திலேயே அப்பொருள் அறியக் கிடக்கின்றது. இவற்றிற்கெல்லாம் நச்சினார்க்கினியர் விளக்கத்தையே நல் விளக்கமாகக் கொண்டு நாம் மேலே செல்வோம்.

கவிதை நலனில் இன்னும் எத்துணையோ காணவேண்டியுள்ளன. இந்த உவமை மட்டுமன்றி; உருவகம் என்ற ஒன்று உள்ளதையும் குறித்தோம். அது உவமிக்கப்படும் பொருளையும் உவமையையும் வேறாகப் பிரியாது, ஒன்றியே பின்னுவ தென்பதையும் கண்டோம். ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்ற வள்ளுவர் வாக்கு இவ்வுருவகத்தை விளக்கப் போதுமானது என நினைக்கின்றேன். பிறவி எல்லையற்றது கடல்