பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

157


துள்ளார்கள். இத்தகைய ஆய்வாளர்தம் உதவியினாலே தான் நாம் இன்று பல உண்மைகளை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

வானவெளியாகிய இந்த அண்டகோளத்தில் நம் சூரியன் போன்று எத்தனையோ சூரியர்கள் உண்டாம். நம் நாட்டுப் புராணங்கள் துவாதச ஆதித்தர்களை - பன்னிரு சூரியர்களைக் குறிப்பதை நாம் கட்டுக்கதையென்று தள்ளிவிட்டோம். ஆனால் ஆய்வுக்களத்தில் இவர்கள் அமர்ந்து கண்ட உண்மையை நம்மால் அவ்வளவு எளிதில் தள்ளிவிடமுடியாது. பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற சூரியன் வரையறுத்த வாழ்விலே இவ்வுலக மக்களாகிய நம் வாழ்வு அமைகின்றது என்று எண்ணும்போது, இவ் வாழ்க்கை அத்தனை கோடி மைல்களைப் பின்னிப் பிணிக்கின்ற பெருவாழ்வாக அமைகின்றது என்பதைக் கணக்கெடுத்து வைத்தவராகின்றோம். நம் உலகமே சூரியன் சுழற்சியிலேயிருந்து சிதறின ஒரு பொறியாகும் என்றும், இதுவும் அக்காலத்து ஒரு நெருப்புத் துளியாகவே இருந்ததென்றும், சுற்றுச் சார்புகட்கு ஏற்பச் சிறிதுசிறிதாகக் குளிர்ச்சி அடைந்து வருகின்ற தென்றும், அந்த நெருப்பு நிலை இன்னும் நிலத்தில் உள்ளமை தான் தோண்டத்தோண்ட உள்ளே சூடு அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்றும் கூறுவர் ஆய்வாளர். எனவே இவ்வுலகம் சூரியனது ஒரு திவலை. இந்த உலகம் இப்படியே பலகோடி ஆண்டுகள் செல்லச் செல்ல, வெப்ப நிலை மாறி குளிர்ந்து, உயிர்ப்பொருள்கள் வாழ்வதற்கே வகையற்றதாகி விடும் என்றும் ஆய்வாளர்கள் குறித்துள்ளார்கள். சந்திரன் அவ்வாறு குளிர்ந்த ஒரு கோளமே என்றும், அதனாலேதான் அதனிடத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தண்மை வாய்ந்துள்ளன என்றும் ஆராய்ந்துள்ளனர். மேலும் விண்ணில் தெரிகின்ற பல்வேறு நட்சத்திரங்களாகிய விண்மீன்களுட் பல, தோற்றத்தில் பெரியவையென்றும், சூரியனைவிட மிகப்பெரிய நெருப்புக் கோளங்களெல்லாம் உள்ளன என்றும், ஒவ்வொரு கோளத்தைச் சுற்றியும் பலப்பல உலக மண்டலங்கள் வட்ட