பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

கவிதையும் வாழ்க்கையும்


தமிழ்நாட்டில் அதுபற்றி அறிந்திருந்தார்கள் என்று கொள்ளுதல் சாலும். அவர் கூறுவது என்ன?

வானவெளியாகிய அந்த அடக்க முடியாத வெட்ட வெளியிலே உருண்டைகள் பலப்பலவாய் அமைந்துள்ளன. அவற்றின் தன்மை, தோற்றம், அமைப்பு முதலியவற்றை அளக்க முடியுமோ என்றால், அது இயலாத ஒன்றாகும். எனினும், அது ஆராய ஆராய வளர்ந்துகொண்டே செல்லும் ஒரு பெருங்காட்சியாகப் பெருகிக் கொண்டே இருக்கும். ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்தோ, ஒப்பு நோக்கியோ எண்ணி முடிவு காண முயலுவோமாயின், அதுவும் இயலாது; நூறு கோடிக்கும் மேற்பட்டுச் செல்லும் பேரெண்ணாலும் அவற்றின் எண்ணிக்கையையும் பிற தன்மைகளையும் அறுதியிட முடியாது என்கின்றார். அவற்றின் பெருக்கத்தையும் அண்ட முகட்டில் அவை பெற்ற இடத்தையும் அவர் கூறுவது - அதுவும் ஒரு சிறந்த உவமையால் விளக்கிக்காட்டுவது-ஒப்புயர்வற்ற ஒன்றாகும். ‘இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச் சிறியவாக’ ஒவ்வோர் உலகும் அண்டகோளத்தில் அமைகின்றது என்பது அவர் காட்டும் உவமை.

வீட்டில் வாழும் நமக்கு அவர் காட்டும் உவமை எளிமையில் விளங்கக்கூடியதே. வானவெளியில் பல கோடிக் கற்களுக்கு அப்பாலிருந்து ஒளிக்கதிர்களை உலகுக்கு அனுப்புகின்றான் சூரியன். அக்கதிர்கள் எப்பொருள் மேலும் படுகின்றன. வீட்டின் மேலும் அவை படுகின்றன. வீட்டில் எங்கேனும் ஒரு சிறு துவாரம் இருப்பின், அது வழியாக அக்கதிர் வீட்டினுள்ளும் புகுகின்றது. புகுந்து, அக் கதிர்ஒளி வீட்டில் செல்லுங்கால், அந்த ஒளியில் பலப்பல தூசுகள் பறப்பதைக் காண்கின்றோம். அவைகளை அணு என்று சொல்வார்கள். அந்த அணுவைத்தான் இந்த உலகுக்கு உவமையாகக் கொள்ளுகின்றார் மணிவாசகர். பரந்து விரிந்த எல்லையில்லாத இந்த அண்ட முகட்டில் உள்ள சூரியன் நான்கு பக்கங்களிலும் தன் ஒளியைப் பரப்புகின்றான். அவ்வொளிக் கதிர்கள் அந்நாற் புறங்களிலும் எத்தனையோ கோடி கோடிக்